சாத்தான்குளத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட 55 பா.ஜனதாவினர் கைது; கால்வாயில் தண்ணீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார்
சாத்தான்குளத்தில், புத்தன் தருவைகுளத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறப்பதில் பாரபட்சமாக நடந்து கொண்ட அதிகாரிகளை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
தண்ணீர் திறப்பதில் பாரபட்சம்
சடையனேரி கால்வாய் வழியாக புத்தன்தருவை மற்றும் சடையனேரி குளங்களுக்கு தண்ணீர் வருகிறது. மெஞ்ஞானபுரம் அருகே ராமசுப்பிரமணியபுரத்தில் உடன்குடி, சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு
தண்ணீர் வரும் வகையில் சடையனேரி குளத்துக்கு இரு ஷட்டர்களும், புத்தன்தருவை, வைரவன் தருவை குளங்களுக்கு 4 ஷட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கால்வாயில் 250 கனஅடி தண்ணீர வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அரசு விகிதாசார அடிப்படையில் இரு பகுதிகளுக்கும் தண்ணீர் விட இரு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் புத்தன்தருவை குளத்துக்கு வரும் பகுதியில் குறைவான அளவு தண்ணீர் வரும் வகையிலும்,
உடன்குடி பகுதிக்கு செல்லும் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்லும் வகையிலும் தண்ணீர் திறந்து விட்டதாக புகார் எழுந்தது. இதனால் குளங்களுக்கு தண்ணீர் திறப்பதில் பாராபட்சமாக நடந்து கொண்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், முறையாக புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரியும் பா.ஜனதா சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
சாலைமறியல்
இதையடுத்து சாத்தான்குளம் தாசில்தார் லட்சுமி கணேஷ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து நேற்று திட்டமிட்டபடி சாத்தான்குளம் பழைய பஸ் ஸ்டாண்டில் பா.ஜனதாவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட துணைத் தலைவர் இடைச்சிவிளை கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாாளர் பூவுடையார்புரம் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சாத்தான்குளம் ஒன்றிய தலைவர் செந்தில், ஒன்றிய பொதுச் செயலாளர் ராம்மோகன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் முத்துலிங்கம், ஒன்றிய அமைப்பு சாரா பிரிவு அமைப்பாளர் பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 55 பா.ஜனதாவினரை சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story