கரிக்கலாம்பாக்கம் ரவுடி கொலை வழக்கு: போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் கோர்ட்டில் சரண்
வில்லியனூர் அருகே ரவுடி படுகொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
ரவுடி படுகொலை
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் ரவி என்கிற ரவிக்குமார் (வயது 27) ரவுடி. அதே பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பிகளான அருணாசலம் (30), அருண்பாண்டியன் (25). இவர்களும் ரவுடிகள். முன் விரோதம் காரணமாக இவர் களுக்குள் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அருணாசலம், அருண்பாண்டியன் இவர்களது கூட்டாளி மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவிக் குமாரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.
ரவிக்குமாரின் உடல் கதிர்காமம் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கரிக்கலாம்பாக்கத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் கடலூர், விழுப்புரம் பகுதியில் தனித்தனி குழுவாக முகாமிட்டு குற்றவாளிகளான அருணாசலம், அருண்பாண்டியன், மணிகண்டன் உள்பட 8 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
கோர்ட்டில் சரண் அடைந்தனர்
இந்த நிலையில் போலீசார் தங்களை தீவிரமாக தேடி வருவதை அறிந்த முக்கிய குற்றவாளிகளான அருண்பாண்டியன், அருணாசலம் மற்றும் அய்யனார் ஆகியோர் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.இதை தொடர்ந்து போலீசார் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து புதுவை போலீஸ் சூப்பிரண்டு (மேற்கு) ரங்கநாதன் கூறியதாவது:-
சரணடைந்த குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்படும். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மனம் திருந்தி சமூகத்தில் வாழ நினைத்தாலும் அவர்கள் செய்த தவறுகள் அவர்களை வாழ விடுவதில்லை. எனவே குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் அது ஒரு ஒருவழிப்பாதை என்பதை தெரிந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதும் குற்றவாளிகளாக மாறுவதும் மாற நினைப்பதும் தவறு என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிறுசிறு தவறுகளுக்காக சிறைக்கு சென்று பெரிய குற்றவாளிகளாக மாறி வருகின்றனர் சிறுவர்கள். எனவே இதுகுறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story