பூந்தமல்லியில் புதிய மெட்ரோ ரெயில் பணிமனை ஜல்லி கற்களை பயன்படுத்தி தண்டவாளம் அமைக்க திட்டம்


பூந்தமல்லியில் புதிய மெட்ரோ ரெயில் பணிமனை ஜல்லி கற்களை பயன்படுத்தி தண்டவாளம் அமைக்க திட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2021 3:05 AM GMT (Updated: 1 Feb 2021 3:05 AM GMT)

பூந்தமல்லியில் புதிதாக அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பணிமனையில் இந்திய ரெயில்வே அமைத்துள்ளது போன்று ஜல்லி கற்களை பயன்படுத்தி தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை, 

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் கட்டமாக 45 கிலோ மீட்டருக்கு 2 பாதைகளில் ரெயிலை இயக்கி வருகின்றனர். தொடர்ந்து 2-ம் கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 2-ம் கட்டத்தில் இயக்கப்படும் ரெயில்களை பராமரிப்பதற்காக பூந்தமல்லியில் ஒரு ரெயில் பணிமனையை அமைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளியை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரி உள்ளது. அதில் செலவினங்களை குறைக்கும் வகையில் பணிமனைக்கு உள்ளே இந்திய ரெயில் நிறுவனம் அமைத்துள்ளது போன்று ஜல்லி கற்களை பயன்படுத்தி தண்டவாளங்கள் அமைப்பது உள்பட சில தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் புதிதாக அமைக்கப்படும் ரெயில் பணிமனையில் ஆறு பெட்டிகளை கொண்ட 96 மெட்ரோ ரெயில்களை பராமரிக்க வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதில் ரெயில் நிலையங்களையும், தாழ்வாரங்களையும் இணைக்கும் மெயின் லைன் கான்கிரீட் முறையில் அமைக்கப்படுகிறது. ரெயில்களை கழுவும் பகுதியும் கான்கிரீட் முறையில் தண்டவாளங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிமனையில் 24 ரெயில் நிறுத்தும் தண்டவாளங்கள் அமைக்கப்படுகிறது.

செலவினம் குறைப்பு

இந்திய ரெயில்வே இயக்கும் ரெயில்களின் எடைக்கும்,வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் தண்டவாளங்களின் நடுவே ஜல்லி கற்கள் மற்றும் பலம் பொருந்திய காங்கிரீட் பலகைகள் (ஸ்லீப்பர்கள்) பயன்படுத்தி தண்டவாளங்கள் அமைக்கப்படுவது வழக்கம். இவை அமைப்பதற்கான செலவு குறைவாக உள்ளது. ஆனால் இந்திய ரெயில்வே நிறுவனத்தின் ரெயில்களை ஒப்பிடுகையில் மெட்ரோ ரெயில்களின் எடையும் மிக குறைவு, அத்துடன் இயக்கப்படும் வேகமும் குறைவாக இருப்பதால் மெட்ரோ ரெயில் தண்டவாளங்களை தாங்குவதற்கு கான்கிரீட் முறை பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக இந்திய ரெயில்வே அமைக்கும் தண்டவாளங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2 கோடி செலவாகிறது. ஆனால் மெட்ரோ ரெயிலுக்கு கான்கிரீட் முறையில் அமைக்கும் தண்டவாளங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.5 கோடி வரை செலவிட வேண்டி இருக்கிறது.

இதனால் சென்னையில் 2-ம் கட்டமாக நடக்கவிருக்கும் மெட்ரோ ரெயில் பணிகளில் செலவினத்தை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிப்காட்டில் உயர்த்தப்பட்ட பாதையில் ஒரு பணிமனை கட்டும் திட்டத்தை ரத்து செய்வது உள்பட திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் 2-ம் கட்டத்தின் செலவு ரூ.89 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.61 ஆயிரத்து 843 கோடியாக குறைந்து உள்ளது.

ஜல்லி கற்கள் பயன்பாடு

பூந்தமல்லி மெட்ரோ ரெயில் பணிமனை கட்டுமானத்தில் செலவினத்தை குறைக்கும் வகையில் ஜல்லி கற்கள் பயன்படுத்தி தண்டவாளங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தவகை தண்டவாளங்களில் குப்பைகள் அகற்றுவது போன்ற பராமரிப்பு பணிகள் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் கான்கிரீட் தண்டவாளங்களில் அதுபோன்று பெரிய அளவில் பராமரிப்புக்கு அதிக தொகை செலவு செய்ய வேண்டியிருக்காது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story