கேரள மாநிலத்துக்கு கடத்தப்பட்ட பெருமாள் கோவில் 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு; 7 பேர் கைது


கேரள மாநிலத்துக்கு கடத்தப்பட்ட பெருமாள் கோவில் 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு; 7 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2021 4:18 AM GMT (Updated: 2 Feb 2021 4:18 AM GMT)

பெரியபாளையம் அருகே பெருமாள் கோவிலில் கடத்தப்பட்ட 3 ஐம்பொன் சிலைகளை தனிப்படை போலீசார் கேரளாவில் மீட்டனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே அன்னதானகாக்கவாக்கம் கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 ஐம்பொன் சிலைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி திருட்டு போனது. இதுதொடர்பாக ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் செவிட்டுபனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்களான கவிசெல்வமணி (வயது 21), அம்பேத்கர் (39) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அன்னதானகாக்கவாக்கம் கிராமத்தில் பெருமாள் கோவிலில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஐம்பொன் சிலைகளை திருடியதை ஒத்துக்கொண்டனர்.

மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்படி, பொன்னேரி அருகே பஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்த ராபர்ட் (23), அக்கரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (44), கும்மிடிப்பூண்டி ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜா (29), செங்குன்றம் வள்ளலார் நகரைச் சேர்ந்த கார்த்திக் (27) ஆகியோருடன் சேர்ந்து 3 ஐம்பொன் சிலைகளையும் கொள்ளையடித்தது தெரியவந்தது.

7 பேர் பிடிபட்டனர்

மேலும் அவர்கள் சிலைகளை கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த விஜயன் (42) என்பவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. எனவே, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி ஆகியோரின் உத்தரவின் பேரில், பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், குற்றப்பிரிவு போலீசார் ராவ்பகதூர்,

நாகராஜ், லோகநாதன், அருணகிரி, சவுந்தர்குமார், ராஜூ ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கேரள மாநிலம் சென்று ஐம்பொன் சிலைகளை மீட்டு விஜயனை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

மேலும், இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர் கொண்ட கும்பல் மீது பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும், கேரளாவுக்கு சென்று ஐம்பொன் சிலைகளை மீட்டு வந்த பெரியபாளையம் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் பாராட்டினார்.

Next Story