மது குடிக்க பணம் தர மறுத்ததால் மனைவி-மாமியார் மீது உருட்டுக்கட்டை தாக்குதல்; டிரைவர் கைது


மது குடிக்க பணம் தர மறுத்ததால் மனைவி-மாமியார் மீது உருட்டுக்கட்டை தாக்குதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2021 9:50 PM GMT (Updated: 4 Feb 2021 10:11 PM GMT)

மது குடிக்க பணம் தர மறுத்ததால் மனைவி, மாமியாரை உருட்டு கட்டையால் தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

நம்பியூர்,

நம்பியூர் அருகே உள்ள கோசனம் செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது36). டிரைவர். அவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் ராஜேஸ்வரியின் தாய் மசிரியம்மாளும் வசித்து வருகிறார். குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு கோவைக்கு சென்று தங்கியிருந்து கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். 

குழந்தைகளை மசிரியம்மாள் கவனித்து வருகிறார். சம்பவத்தன்று ராஜேஸ்வரி கோவையில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் குமார் தனது மனைவியிடமும், மாமியாரிடமும் மது குடிக்க பணம் கேட்டு்ள்ளார். அதற்கு அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த குமார், உருட்டுக்கட்டையால் ராஜேஸ்வரியையும், மசிரியம்மாளையும் தாக்கியுள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இதுகுறித்த புகாரின் பேரில் நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன் வழக்குப்பதிவு செய்து, குமாரை கைது செய்தார்.

Next Story