தேர்தல் பிரசாரத்தில் அரசியல் நாகரீகம்: தி.மு.க வட்ட அலுவலகத்துக்கு சென்று தி.மு.க.வினருடன் கை குலுக்கிய சைதை துரைசாமி
தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வினருடன் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி கை குலுக்கினார்.
சைதை துரைசாமி
சென்னை சைதாப்பேட்டை அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் பிரசார வாகனத்தில் சென்று வாக்காளர்களை சந்திப்பதை காட்டிலும், வீதி, வீதியாக நடந்து சென்று வாக்காளர்களை சந்திப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.எனவே அவர், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்தநிலையில் குருத்தோலை ஞாயிறான நேற்று கோட்டூர்புரம் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்று கிறிஸ்தவர்களிடம் ஓட்டு கேட்டார்.
நலம் விசாரித்து வாக்குசேகரிப்பு
மேலும் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோட்டூர்புரம் பகுதிக்குட்பட்ட வார்டுகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் மீது பூக்களை தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கோட்டூர்புரம் பகுதி இளைஞர்களிடம் போட்டி தேர்வுகள் குறித்தும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் போட்டி தேர்வுக்கு அரசு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்தும் எடுத்துக்கூறி, சைதை துரைசாமி வாக்கு சேகரித்தார்.அப்பகுதியில் விபத்தில் காயம் அடைந்த ஒருவரை அவரது
வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறி தனக்கு ஆதரவு திரட்டினார்.
தி.மு.க. அலுவலகத்துக்கு சென்றார்
பிரசாரத்தின்போது தி.மு.க. வட்ட அலுவலகத்துக்குள் சைதை துரைசாமி திடீரென்று புகுந்து விட்டார். அவரை கண்டதும் அங்கு இருந்த தி.மு.க.வினர் எழுந்து நின்று வரவேற்றனர். அவர்களிடம் சைதை துரைசாமி கைகுலுக்கி தனக்கு ஆதரவு திரட்டினார்.
அ.தி.மு.க. வேட்பாளரான சைதை துரைசாமி தி.மு.க. அலுவலகத்துக்கு சென்றது ஆரோக்கியமான அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story