அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து பிரசாரம்: பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் தி.மு.க.வை விரட்டியடிக்க வேண்டும்; கோவையில் த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு


அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து பிரசாரம்: பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் தி.மு.க.வை விரட்டியடிக்க வேண்டும்; கோவையில் த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 30 March 2021 12:15 AM GMT (Updated: 30 March 2021 12:19 AM GMT)

பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் தி.மு.க.வை விரட்டியடிக்க வேண்டும் என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

ஜி.கே.வாசன் பிரசாரம்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டி யிடும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து ஆர்.எஸ்.புரத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியதாவது:-
தொண்டாமுத்தூரில் போட்டியிடும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூருக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல. உள்ளாட்சிகளின் சொந்தக்காரர். உள்ளாட்சியில் அவரது சிறப்பான சேவையால் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் பெருமையாக பேசி வாக்கு சேகரிக்க முடிகிறது. தொண்டாமுத்தூரில் அவர் பெறும் வெற்றி என்பது அ.தி.மு.க.வின் வெற்றியாகும். மறைந்த ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு படிப்படியாக கட்சிப் பணிகளால் உயர்ந்து இன்றைக்கு தமிழக முதல்- அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சருக்கும் துணையாகவும், கட்சியின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

தி.மு.க.வை விரட்டியடிக்க வேண்டும்
தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் செயல்படுத்துவதற்கு பக்கபலமாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திகழ்கிறார். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வரவேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டும். திட்டங்களை முடக்க நினைத்து பொய்யான வாக்குறுதிகளை கூறி ஊரை ஏமாற்றும் தி.மு.க.வை விரட்டியடிக்க வேண்டும். எனவே அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

அமைச்சர் பேச்சு

பிரசாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
தொண்டாமுத்தூர் தொகுதியில் சாலைகள், பாலங்கள், கல்லூரிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் மேம்பாடு, விமான நிலையம் விரிவாக்கம் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் எல்லா பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே என்றைக்கும் உங்கள் சகோதரனாக இருந்து பணியாற்றும் என்னை பொது வேட்பாளராக நினைத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு அளித்து வெற்ற பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story