திருவள்ளூர் மாவட்டத்தில் 1,109 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்தில் உபகரணங்கள்


திருவள்ளூர் மாவட்டத்தில் 1,109 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்தில் உபகரணங்கள்
x
தினத்தந்தி 1 Oct 2021 11:59 AM GMT (Updated: 1 Oct 2021 11:59 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,109 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்தி்ல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென தலைமை செயலக அளவிலும் மற்றும் துறை தலைமை அளவிலும் இந்தியாவிலேயே தனித்துறையை கொண்ட தனி சிறப்பு கொண்ட ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அலுவலகங்களை கொண்டுள்ளது. அரசால் மாற்றுத்திறனாளிகளை பரிவுடன் கவனித்து கொள்வதற்கும் அவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் கொள்கைகள் தங்கு தடையின்றி சென்றடைவதற்கு இத்தகைய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உடல் ஊனமுற்றோர் என்று குறிப்பிடப்பட்டு வந்தவர்கள் தம் உடல் வலிமையையும், மனவலிமையையும் மனதார உணர்ந்தபடியால் மாற்றுத்திறன் கொண்டு தம் அயராத முயற்சியால் ஒவ்வொரு செயலையும் செவ்வனே செய்து வருபவர்களை இனி மாற்றுத்திறனாளிகள் என்றே அழைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு இன்றுவரை மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிடப்பட்டு வருவது சிறப்புக்குரியதாகும்.

சிறப்பு முகாம்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நோய் தடுப்பு நடவடிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் வியாழக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களில் தங்கியுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. மையம் மூலமாக இதுவரை 162 மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று தற்போது தனியார் துறையில் வேலை செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுநாள் வரை 18 ஆயிரத்து 400 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 2021-22 ஆம் நிதியாண்டில் 6,900 மனவளர்ச்சி குன்றியோர், 620 கடுமையாக பாதிக்கப் பட்டோர், 121 தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், 183 தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் 52 முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் என மொத்தம் 7 ஆயிரத்து 66 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் தலா ரூ.1,500 வீதம் இதுநாள்வரை ரூ. 5 கோடியே 29 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில்

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு திட்டமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, நவீன செயற்கை கால், ஊன்றுகோல், மனவளர்ச்சி குன்றியோருக்கான கற்றல் உபகரணம், பார்வையற்றோருக்கான மருத்துவ உபகரணம் மற்றும் கைபேசி தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ உபகரணம் மற்றும் கைபேசி, நவீன காதொலி, பேட்டரிகள் மற்றும் காலிப்பர் போன்ற உதவி உபகரணங்கள் 1109 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் இடத்திலிருந்து உதவிகள் வேண்டி பெறப்பட்ட மனுக்கள் மீது நேரடி கள ஆய்வு செய்யப்பட்டு அதில் தகுதியான 32 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், நவீன காதொலி கருவி, சக்கர நாற்காலி மற்றும் தேசிய அடையாள அட்டை போன்ற உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவிகளை உடனுக்குடன் கிடைத்திடும் வகையில் தனது கட்டுப்பாட்டின்கீழ் இந்த துறையை செயல்படுத்தி தீவிரமாக கண்காணிப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் தடையின்றி கிடைப்பதால் இதன் மூலம் பயன் பெற்று வரும் திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story