திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆய்வு: ஒரு மாதத்தில் தங்கத்தேர் வீதி உலா வரும் அமைச்சர் தகவல்


திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆய்வு: ஒரு மாதத்தில் தங்கத்தேர் வீதி உலா வரும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2021 12:33 PM GMT (Updated: 1 Oct 2021 12:33 PM GMT)

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு இன்னும் ஒரு மாத காலத்தில் அங்குள்ள தங்கத்தேர் வீதி உலா வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பள்ளிப்பட்டு,

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் கட்டப்பட உள்ள புதிய திருமண மண்டபம், நிர்வாக பயிற்சி பள்ளி, இசை பள்ளி உள்ளிட்ட இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் புதிய திருமண மண்டபம், நிர்வாக பயிற்சி பள்ளி, இசை பள்ளி உள்ளிட்ட இடங்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

கட்டணமில்லா முடிக்காணிக்கை சீட்டு

ஆய்வின் போது அமைச்சர்.சேகர்பாபு கூறியதாவது:-

சட்டமன்ற துறை மானிய கோரிக்கையின்போது, கோவில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 5-ந் தேதி அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் வரிசையில் வந்து முடி காணிக்கை செலுத்தும் இடத்தின் அருகில் உள்ள மின்னணு எந்திரத்திற்கு முன் நின்று 89399 71540 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அவருடைய புகைப்படத்துடன் கூடிய கட்டணமில்லா முடிக்காணிக்கை அனுமதிசீட்டு அந்த இடத்திலேயே கோவில் பணியாளர்களால் வழங்கப்படும். கட்டணமில்லா முடிக்காணிக்கை அனுமதி சீட்டை முடி நீக்கும் பணியாளரிடம் வழங்கினால் அவர் மேற்படி அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டு பக்தர்களுக்கு முடியை நீக்குவார்.

ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை

பக்தர்கள் வழங்கும் கட்டணமில்லா முடிகாணிக்கை அனுமதி சீட்டை முடி நீக்கும் பணியாளர் சேகரித்து அதனை கோவில் அலுவலகத்தில் கொடுத்து, ஒரு பக்தருக்கு முடி நீக்க தலா ரு.30 என பங்கு தொகையினை பெற்றுக்கொள்ளலாம். மேலும், அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் 35 முடி நீக்கும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த கோவிலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள நவீன திருமண மண்டபத்திற்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுப்பட்டுள்ளது. மேலும், கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள நாதஸ்வரம், தவில் இசை பயிற்சி பள்ளி, ரூ.5 கோடி மதிப்பீட்டில் கோவிலுக்கான நிர்வாக பயிற்சி பள்ளி இடத்தினை ஆய்வு மேற்கொண்டு பணிகள் தொடங்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைக்கோவிலில் கம்பிவட ஊர்தி அமைப்பதற்கும், மாற்று மலைப்பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

தங்கத்தேர் வீதி உலா

மேலும், 10 ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேரை செப்பனிடும் பணியும் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஒரு மாதத்திற்குள் தங்கத்தேர் வீதி உலா வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெள்ளித்தேரும் முழுவதுமாக சிதிலமடைந்துள்ளது. அந்த வெள்ளித்தேரையும் சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு, 3 வேளை அன்னதான திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தேன். சமையலறைகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தவும், பரிமாறப்படும் உணவு தரமானதாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியா தர்ஷிணி, திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி, இணை ஆணையர் (தக்கார்) லட்சுமணன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திருத்தணி ஆய்வு முடிந்து திரும்பிய வழியில், திருவாலங்காடு வடராண்யேஸ்வரர் கோவிலில் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story