சசிகலா பொதுச்செயலாளராக நீடிக்க தடை கோரிய மனு தள்ளுபடி


சசிகலா பொதுச்செயலாளராக நீடிக்க தடை கோரிய மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 28 July 2017 11:33 PM GMT (Updated: 28 July 2017 11:33 PM GMT)

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, அவரது கட்சியினர் அவரிடம் ஆலோசனை பெறுவதில் தவறு இல்லை என்றும் கூறி உள்ளது.

புதுடெல்லி,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க தடை விதிக்க கோரி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் அறிவுறுத்தலின்படி, தமிழக முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க, சசிகலாவுடன் ஆலோசித்ததாக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்ட ஆளும்கட்சியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஊழலுக்கு எதிரான சட்டங்களை அவமதிக்கும் செயல். எனவே, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வசீகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் என்.ராஜாராமன் ஆஜரானார்.

விசாரணை தொடங்கியதும், மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

‘‘தண்டனை பெற்றவரிடம் ஆலோசனை பெறுவதை எந்த வகையிலும் தடுக்க முடியாது; தலையிடவும் முடியாது. ஒருவர் அறிவுரை கூற தகுதியானவராக இருந்தால் அவர் தண்டனை பெற்றவராக இருந்தாலும் அவரிடம் ஆலோசனை பெறுவதில் தவறு ஏதும் கிடையாது. எனவே சசிகலாவிடம் அவருடைய கட்சியினர் ஆலோசனை பெறுவதில் தவறு இல்லை’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


Next Story