ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்தால் சலசலப்பு


ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்தால் சலசலப்பு
x
தினத்தந்தி 7 Aug 2018 9:53 AM GMT (Updated: 7 Aug 2018 9:53 AM GMT)

ஆர்.எஸ்.எஸ். இடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #RSS

போபால், 

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா பகுதியில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதிற்கு மத்திய பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கட்சி நிர்வாகிகள் அமர்வதற்கு மேடையில் இருக்கை போடப்பட்டு இருந்தது. ஆனால், உள்ளூரில் பிரபலமானவராக விளங்கும் விக்ரம் சிங் பவார் பானா என்ற நிர்வாகிக்கு இருக்கை போடப்படாமல் இருந்தது. 

இதனால், அதிருப்தி அடைந்த பவர் பானா, கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மெகமுத் கமிலிடம் புகார் செய்தார். தொடர்ந்து, பவார் பானா ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.  கோஷ்டி மோதல் முற்றவே,  இரு தரப்பினரும் நாற்காலிகளை வீசி எறிந்தனர். இந்தச்சண்டையால், அதிருப்தி அடைந்த தீபக் பபாரியா,  கட்சியினர் உடனடியாக சண்டையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்றார். பாரதீய ஜனதா கட்சியின் சித்தாந்த அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கடுமையாக கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்ற ரீதியில் பேசியது புருவத்தை உயர்த்தச்செய்தது. 

ஆனால், தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள தீபக் பபாரியா, “ பண்டித நேரு சீன போரின் போது எவ்வாறு அவர்களை பயன்படுத்தினாரோ அது போலவே நான் அவர்களது ஒழுக்கத்தை பாராட்டினேன். எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் சரி, சரியாக இருந்தால் அதை பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை. எங்கு போட்டி இருக்கிறதோ, அங்கு இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால், அவர்கள்(கட்சியினர்) ஒழுக்கமாக இருப்பார்கள் என நான் நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story