தேசிய செய்திகள்

அமித் ஷா மீது காங்கிரஸ் பரபரப்பு புகார் + "||" + Congress complains to Amit Shah

அமித் ஷா மீது காங்கிரஸ் பரபரப்பு புகார்

அமித் ஷா மீது காங்கிரஸ் பரபரப்பு புகார்
அமித் ஷா மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டபோது தனது கடன்கள் விவரத்தை பிரமாண பத்திரத்தில் கூறாமல் மறைத்து விட்டார் என்று காங்கிரஸ் கட்சி புகார் கூறி உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா தனது மகன் ஜெய் ஷாவின் குசும் பைன்சர்வ் நிறுவனத்துக்காக ரூ.95 கோடி அளவுக்கு கடன் பெற்று தந்து உள்ளார். இந்த கடனை அவர் 2 வங்கிகளிடம் இருந்தும், ஒரு அரசு நிறுவனத்திடம் இருந்தும் பெற்றார்; ஆனால் குசும் பைன்சர்வ் எல்.எல்.பி. நிறுவனத்தின் நிகரச்சொத்து மதிப்பு அதன் இருப்புச்சீட்டுபடி ரூ.5 கோடியே 83 லட்சம்தான்.

தனது மகனுக்காக இந்த கடன்களை பெற்றிருப்பதை அமித் ஷா கடந்த ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறாமல் மறைத்து விட்டார்.

இது தொடர்பாக அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனிடம் முறையிடுவோம்.

குசும் பைன்சர்வ் நிறுவனம் எரிசக்தி துறையில் அனுபவம் இல்லாதது. ஆனால் பியூஷ் கோயல், எரிசக்தி துறை மந்திரியாக இருந்த போது ஐ.ஆர்.இ.டி.ஏ. நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.10½ கோடி கடன் பெறப்பட்டு உள்ளது.

அமித் ஷாவின் மகனது நிறுவனத்துக்கு குஜராத் தொழில் வளர்ச்சி கழகம், 15 ஆயிரத்து 574 சதுர மீட்டர் நிலம் ஒதுக்கித்தந்து உள்ளது. ரூ.6 கோடியே 33 லட்சம் மதிப்பிலான இந்த நிலம் எப்படி அவருக்கு ஒதுக்கி தரப்பட்டுள்ளது?.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் அமித் ஷா மீதான புகார்களை பாரதீய ஜனதா கட்சி மறுத்துள்ளது.

இதுபற்றி அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பார்த்ரா கூறுகையில், ‘‘தனது மகனின் நிறுவனத்தின் கடன்களை அமித் ஷா தனது கடனாக காட்ட முடியாது. அமித் ஷா மீதான புகார்கள் போலியானவை. அடிப்படை ஆதாரம் இல்லாதவை’’ என குறிப்பிட்டார்.