பொய்யான தகவல்களை கூறி பிரதமர் மோடி நாட்டை ஏமாற்றுகிறார்: காங்கிரஸ் விமர்சனம்


பொய்யான தகவல்களை கூறி பிரதமர் மோடி நாட்டை ஏமாற்றுகிறார்: காங்கிரஸ் விமர்சனம்
x
தினத்தந்தி 13 Aug 2018 2:30 AM GMT (Updated: 13 Aug 2018 3:33 AM GMT)

பொய்யான தகவல்களை கூறி பிரதமர் மோடி நாட்டை ஏமாற்றுகிறார் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

புதுடெல்லி,

தவறான புள்ளி விவரங்களையும், பொய்யான தகவல்களையும் கூறி நாட்டு மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பாஜக தலைமையிலான 4 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில்  நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியானது. இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவண் கேரா கூறியதாவது:

மோடி அரசின் ஆயுள் இன்னும் 9 மாதங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. வெளிப்படையாகக் கூறிக் கொள்ளும் அளவுக்கு அவர் நாட்டுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், தவறான புள்ளி விவரங்களையும், பொய்யான தகவல்களையும் கூறி நாட்டு மக்களை அவர் ஏமாற்றி வருகிறார். தனது தோல்விகளை மக்கள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதும், தங்களுக்கு நல்ல நாள்கள் வந்துவிட்டன என்று மக்கள் நம்ப வேண்டும் என்பதுமே பிரதமரின் நோக்கமாக உள்ளது.

பிரதமர் கூறுவது குறித்து அவரது அமைச்சரவை சகாக்கள் மத்தியிலேயே வேறுபட்ட கருத்துகள் உள்ளன. முக்கியமாக ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட்டதாக மோடி கூறுகிறார். ஆனால், நாட்டில் வேலைவாய்ப்பே உருவாகவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பணியாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்தில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கையை வைத்து வேலைவாய்ப்பு உருவாக்கிவிட்டதாக மோடி கூறுகிறார். வேலைவாய்ப்பு உருவாக்க புள்ளி விவரத்தை, பணியாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் புள்ளி விவரத்துடன் மோடி எப்படி ஒப்பிடுகிறார் என்பது தெரியவில்லை.

உண்மையில் மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு 1.26 கோடி பேர் வேலை இழந்துவிட்டார்கள். இதனை நான் கூறவில்லை. சர்வதேச அமைப்பு ஒன்று இந்தியாவில் ஆய்வு நடத்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மோடி அரசு தனது முக்கியத் திட்டமாக முன்னெடுத்த தூய்மை இந்தியா திட்டம் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. நாட்டு மக்களுக்கு நல்ல நாள்களை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து மோடி தேர்தலில் வெற்றி பெற்றார். நாட்டில் எத்தனை பேருக்கு அந்த நல்ல நாள்கள் வந்துள்ளன? வரும் மக்களவைத் தேர்தலுடன் இந்த ஆட்சி முடிவுக்கு வரும். அதுதான் நாட்டு மக்களுக்கு நல்ல நாளாக அமையும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story