வங்காள மொழி பேசுவோர் கொல்லப்பட்ட விவகாரம்: கொலையாளிகளை பிடிக்க அசாம் முழுவதும் தேடுதல் வேட்டை


வங்காள மொழி பேசுவோர் கொல்லப்பட்ட விவகாரம்: கொலையாளிகளை பிடிக்க அசாம் முழுவதும் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 2 Nov 2018 10:45 PM GMT (Updated: 2 Nov 2018 9:53 PM GMT)

அசாமில் வங்காள மொழி பேசுவோர் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் தின்சுகியா மாவட்டத்தில், வங்காள மொழி பேசுவோர் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் கெரோனிபரி கிராமத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு வங்காள மொழி பேசுவோர் சிலர் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த சிலர், அந்த வங்காள மொழி பேசுவோர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாநில போலீஸ் டி.ஜி.பி. மற்றும் கூடுதல் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அவர்கள் முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி சர்பானந்த சோனோவால், மந்திரிகள் சிலரை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை அனுமதிக்கமாட்டோம் எனக்கூறியுள்ள அவர், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.

இந்த படுகொலைக்கு அசாமில் இயங்கி வரும் உல்பா (ஐ) பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இந்த சம்பவத்துக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து தின்சுகியா மாவட்டத்தில் நேற்று அசாம் பெங்காளி கூட்டமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. வங்காள மொழி பேசுவோர் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணி நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ள அவர், அசாமில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் விளைவா இது? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

அசாமில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி சுமார் 40 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story