மராட்டியம், உத்தரபிரதேசத்தில் 21 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு


மராட்டியம், உத்தரபிரதேசத்தில் 21 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 March 2019 11:15 PM GMT (Updated: 13 March 2019 9:40 PM GMT)

மராட்டியம், உத்தரபிரதேசத்தில் 21 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். நடிகர் ராஜ்பாப்பர் மொரதாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மராட்டியம், உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். நடிகர் ராஜ் பாப்பர் மொரதாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியானது. அப்போது, உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பெயர்களும், குஜராத்தில் போட்டியிடும் 4 வேட்பாளர்களின் பெயர் களும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மராட்டிய மாநிலத்தில் 5 தொகுதிகளுக் கான வேட்பாளர்கள் மற்றும் உத்தரபிரதேசத்தில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் என மொத்தம் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.

இதுபற்றிய அறிவிப்பை அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் நேற்று இரவு வெளியிட்டார்.

அதன்படி மராட்டிய மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள 5 வேட்பாளர்களில் 3 பேர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். அவர்களில் முன்னாள் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே சோலாப்பூர் (தனி) தொகுதியிலும், முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் முரளி தியோரா மும்பை தெற்கு தொகுதியிலும், நடிகர் சுனில் தத்தின் மகள் பிரியா தத் மும்பை வடக்கு மத்திய தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள 16 வேட்பாளர்களில் நடிகர் ராஜ் பாப்பர் மொரதாபாத் தொகுதியிலும், முன்னாள் மத்திய மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கான்பூர் தொகுதியிலும், சஞ்சய் சிங் சுல்தான்பூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.


Next Story