தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மானியத்தை பெற முடியவில்லை - மத்திய மந்திரி தகவல்


தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மானியத்தை பெற முடியவில்லை - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 17 July 2019 3:43 AM IST (Updated: 17 July 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மானியத்தை பெற முடியவில்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.

புதுடெல்லி,

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தமிழக அரசு மானியத்தை பெற முடியவில்லை என்று மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

மக்களவையில் தி.மு.க. மக்களவை குழு துணைத்தலைவரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, ‘14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்காக மத்திய அரசு வழங்கும் செயல்திறன் மானியத் தொகையினை பெறுவதற்கு (2017-18, 2018-19 நிதியாண்டு நிலுவைத்தொகை) மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து முறையீடுகள் ஏதேனும் வந்துள்ளதா? கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள மானியத்தொகை எவ்வளவு? குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த தொகையினை தமிழ்நாட்டுக்கு கொடுக்காததற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் மந்திரி நரேந்திரசிங் தோமர் பதிலளித்து பேசியதாவது:-

தமிழக அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்திறன் மானியம் எனப்படும் மத்திய அரசின் ஊக்கத்தொகையை வழங்கக்கோரி பல கடிதங்கள் வந்திருக்கின்றன. 5.6.2017, 3.8.2017 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அப்போதைய நிதித்துறை கூடுதல் செயலாளர் சண்முகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

28.2.2018 அன்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பஞ்சாயத்துராஜ் மந்திரிக்கு கடிதம் அனுப்பினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி 21.3.2018, 2.5.2018 ஆகிய தேதிகளில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கே கடிதம் எழுதினார். அதன்பின்னர், 28.8.2018 அன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மீண்டும் பஞ்சாயத்து ராஜ் மந்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

1.11.2018 அன்று நிதித்துறை கூடுதல் செயலாளரும், 27.12.2018, 11.6.2019 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சரும் மீண்டும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள். ஆனாலும் 14-வது நிதி கமிஷனின் நிபந்தனைகளின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால்தான் மத்திய அரசின் இந்த மானியத்தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டில் இருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவே இல்லை. 14-வது நிதி கமிஷனின் பரிந்துரையின்படி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஊரக வளர்ச்சிக்கான செயல்திறன் மானியத்தொகை 2014-15-ம் ஆண்டில் ரூ.866.84 கோடியாக இருந்தது. 2015-16-ம் ஆண்டில் ரூ.947.65 கோடி.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில் 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1,484.31 கோடி, 2017-18-ம் நிதியாண்டில் ரூ.1,710.90 கோடி, 2018-19-ம் நிதியாண்டில் ரூ.1,975.07 கோடி, 2019-20-ம் நிதியாண்டில் ரூ.2,659.50 கோடி தமிழக அரசுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் இவை தமிழக அரசால் பெற முடியவில்லை. இவ்வாறு அவர் பதிலளித்தார்.


Next Story