தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் - மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்


தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் - மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 July 2019 10:15 PM GMT (Updated: 26 July 2019 9:14 PM GMT)

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தி வருவதை தடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். குறிப்பாக பா.ஜனதா உறுப்பினர் ஷேவத் மல்லிக், சமாஜ்வாடி உறுப்பினர் சுரேந்திர சிங் நாகர் ஆகியோர் இது தொடர்பாக பேசினர்.

இது தொடர்பாக மல்லிக் கூறும்போது, தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அதிக அளவு உயர்த்தி இருப்பதுடன், மாணவர்களின் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்களை குறிப்பிட்ட கடையில்தான் வாங்க வேண்டும் என பெற்றோரை அறிவுறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, மேற்படி தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், பெரும்பாலான பெற்றோர் சொந்த வீடு கூட இல்லாமல், தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக அதிக செலவுகளை செய்கிறார்கள் எனவும் வருத்தம் தெரிவித்தார்.

இதைப்போல சுரேந்திர சிங் நாகர் கூறுகையில், நொய்டாவில் உள்ள தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை 150 சதவீதம் வரை உயர்த்தி இருப்பதாகவும், இதை தடுக்க உத்தரபிரதேச அரசு சட்டம் இயற்றி இருந்தும், அதை சரியாக செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார். எனவே இந்த கட்டண கொள்ளையை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


Next Story