கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு காஷ்மீர் போர் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி - மோடி, ராகுல் புகழாரம்


கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு காஷ்மீர் போர் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி - மோடி, ராகுல் புகழாரம்
x
தினத்தந்தி 26 July 2019 10:45 PM GMT (Updated: 26 July 2019 9:31 PM GMT)

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரில் உள்ள போர் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரும் வீரர்களுக்கு புகழாரம் சூட்டினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பனிமலை சிகரத்தில் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினரின் துணையுடன் ஊடுருவல்காரர்கள் புகுந்தனர். அவர்களை விரட்டியடிக்க ‘ஆபரேஷன் விஜய்’ என்ற தாக்குதலை இந்திய ராணுவம் தொடங்கியது. 2 மாதங்களாக நீடித்த சண்டையில், ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த சண்டையில், இந்திய ராணுவ வீரர்கள் 527 பேர் பலியானார்கள்.

கார்கில் மீட்கப்பட்ட ஜூலை 26-ந் தேதி, ஆண்டுதோறும் ‘கார்கில் வெற்றி தினமாக’ கொண்டாடப்படுகிறது. இதன் 20-வது வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றார். ஸ்ரீநகரில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கும் சென்றார்.

அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில், “கார்கில் போர் தியாகிகளுக்கு மாபெரும் நாட்டின் சார்பில் அஞ்சலி செலுத்துகிறேன்” என்று எழுதி ஜனாதிபதி கையெழுத்திட்டார்.

பின்னர், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கார்கில் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

கார்கில் போரின்போது, நான் கார்கிலுக்கு சென்று நமது துணிச்சலான வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாய்ப்பை பெற்றேன். அந்த நேரத்தில் நான் காஷ்மீரிலும், இமாசலபிரதேசத்திலும் எனது கட்சிக்காக பணியாற்றிக்கொண்டிருந்தேன். கார்கில் சென்றதும், நமது வீரர்களுடன் உரையாடியதும் மறக்க முடியாதவை. இந்த நாளில், அன்னை இந்தியாவுக்காக உயிர் துறந்த அனைத்து வீரர்களுக்காகவும் எனது மனம் வேண்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1999-ம் ஆண்டு, கார்கில் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ செய்தியில், “கார்கில் தினத்தையொட்டி, நாட்டை காப்பதில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எண்ணற்ற தியாகங்கள் செய்த துணிச்சலான வீரர்களுக்கு வீர வணக்கம்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “கார்கில் போரில் ஈடுபட்டு நமக்காக உயிரை தியாகம் செய்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story