காருக்கு வழிவிடாத போலீஸ்காரருக்கு நூதன தண்டனை கொடுத்த நீதிபதி


காருக்கு வழிவிடாத போலீஸ்காரருக்கு நூதன தண்டனை கொடுத்த நீதிபதி
x
தினத்தந்தி 28 July 2019 8:19 PM GMT (Updated: 28 July 2019 8:19 PM GMT)

காருக்கு வழிவிடாத போலீஸ்காரருக்கு நீதிபதி நூதன தண்டனை கொடுத்தார்.

புதுடெல்லி,

டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் குரேலால். இவர் போலீஸ் ஜீப் டிரைவராக இருக்கிறார். இவர் ஆக்ராவில் உள்ள கோர்ட்டு அருகே போலீஸ் வாகனத்தை ஓட்டிகொண்டு சென்றார். பின்னால் மாவட்ட நீதிபதி ஒருவர் சென்ற கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது நீதிபதி காருக்கு வழிவிடும்படி டிரைவர் போலீஸ் வாகனத்துக்கு ‘ஹாரன்’ அடித்தார். ஆனால், போலீஸ் வாகனத்தை ஓட்டிச் சென்ற ஏட்டு குரேலால், நீதிபதியின் காருக்கு வழிவிடாமல் சென்றார். அதன்பின் கோர்ட்டுக்கு சென்ற நீதிபதி தனது காருக்கு வழிவிடாமல் சென்ற போலீஸ் ஏட்டு குரேலாலை கோர்ட்டுக்கு வரவழைத்தார்.

அங்கு தனது காருக்கு ஏன் வழிவிடவில்லை? என்று அவரிடம் கேள்வி கேட்டார். பின்னர் ஏட்டு குரேலாலிடம் போலீஸ் சட்டையை கழற்றி வெறும் உடம்புடன் கோர்ட்டு அறை முன்பு நிற்கும்படி கூறி தண்டனை விதித்தார். இதனால் குரேலால், போலீஸ் சட்டையை கழற்றி விட்டு கோர்ட்டு அறை முன்பு அரை மணி நேரம் நின்றார். இதனால் மன வேதனை அடைந்த குரேலால், போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து நடந்த சம்பவங்களை கூறி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். அதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இது உத்தரபிரதேச போலீசாரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து அலகாபாத் ஐகோர்ட்டு பதிவாளர், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஆக்ரா போலீஸ் அதிகாரி பாப்லுகுமார் புகார் கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து போலீஸ் ஏட்டுவை அவமானப்படுத்திய நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டார்.

Next Story