காங்கிரஸ் கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் - சசி தரூர் கோரிக்கையால் பரபரப்பு


காங்கிரஸ் கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் - சசி தரூர் கோரிக்கையால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 July 2019 10:02 PM GMT (Updated: 28 July 2019 10:02 PM GMT)

காங்கிரஸ் கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று சசி தரூர் கோரிக்கை விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததையடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி கடந்த மே மாதம் 25-ந் தேதி விலகினார்.

அவர் பதவி விலகி 2 மாதங்கள் முழுதாக முடிந்தும் இன்னும் காங்கிரஸ் கப்பல், கேப்டன் இல்லாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

இதையொட்டி அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி., செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பீடம் தெளிவற்று இருக்கிறது என்பது நிச்சயம் உண்மைதான். இது காங்கிரஸ் தொண்டர்களையும், அனுதாபிகளையும் பாதிக்கக்கூடும். அவர்களில் பலர் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும், அதிகாரம் செலுத்துவதற்கும், உத்வேகம் அளிக்கவும், ஒருங்கிணைந்து செல்லவும், முன்னோக்கி நடைபோடவும் ஒரு தலைவரை இழக்கிறார்கள்.

காங்கிரஸ் காரியக்குழு ஒரு இடைக்கால தலைவரை அறிவிக்க வேண்டும். அடுத்து காரியக்குழு கலைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கட்சிப்பதவிகளுக்கு, காரியக்குழு பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். இது ஒரு முன்னோக்கிய வழி.

புதிய தலைவர் முற்றிலும் அமைப்பு ரீதியிலான திறன் படைத்தவர் என்கிறபோது, அவர் கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கவும், கட்சியின் அஸ்திவாரத்தை பலப்படுத்தவும் முடியும். அவர்களால் கட்சிக்கு ஆதரவாக புதிய வாக்காளர்களை கொண்டு வந்து சேர்க்கவும் முடியும்.

தலைவர் கவர்ந்து இழுக்கிற செல்வாக்கு உள்ள நபராக இருந்தும், அதே நேரம் அமைப்பு ரீதியிலான திறன் குறைவாகத்தான் பெற்றவர் என்றால், அவர் நேரடியாக தனிப்பட்ட முறையில் மக்களின் ஆதரவைக் கோர முடியும்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, அவர்கள் தங்களுக்கு உரிய கவர்ந்திழுக்கிற திறனை ஓட்டுகளாக மாற்ற வேண்டும். அவர்கள் இதைச் செய்து முடிப்பதற்கு, தொண்டர்களின் ஆதரவை முழுமையாக பெற முடியாது.

இந்த சூழ்நிலைகளில், ஒரு இளம் தலைவர், இதை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என நம்புவதற்கு இடம் இருக்கிறது.

அந்த வகையில் பிரியங்கா கட்சியை வழிநடத்துவதற்கு பொருத்தமான தலைவராக இருப்பாரா என்று கேட்கிறீர்கள்.

அவருக்கு இயற்கையாக கவர்ந்திழுக்கிற திறன் இருக்கிறது. அதுதான் அவரை அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் பலரையும் ஒப்பிட வைக்கிறது. அவர் தொண்டர்களையும் ஊக்குவிக்க முடியும். அதேபோன்று வாக்காளர்களையும் ஊக்குவிக்க இயலும்.

பிரியங்காவுக்கு அமைப்பு ரீதியிலான அனுபவமும் இருக்கிறது. கட்சியின் மையத்தில் ஒரு செல்வாக்கு மிக்க நபராகவும் இருக்கிறார். உத்தரபிரதேசத்தில் தேர்தல் கள அனுபவமும் பெற்றிருக்கிறார்.

ஆனால் அதே நேரம், தங்களது குடும்பத்தில் இருந்து இனி யாரும் தலைவர்களாக வரக்கூடாது என்று ராகுல் காந்தி கூறி விட்டதால், பிரியங்காவுக்கான வாய்ப்பு தகர்ந்து போகிறது.

கட்சித்தலைமையை வழிநடத்த எனக்கு விருப்பம் இருக்கிறதா, தலைமைப்பதவிக்கு போட்டியிடுவேனா என கேட்கிறீர்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நான் கருதவில்லை என்பதை நேர்மையாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அமைப்பு ரீதியில் நான் புதியவன். கட்சியில் ஒரு பத்தாண்டு காலத்துக்கு சற்று அதிகமான காலம்தான் இருந்து வருகிறேன். கட்சியில் மிக நீண்ட காலம் இருந்தவர்கள் இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் போன்ற பதவியை நான் கட்சியில் வகித்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற சசி தரூர் கோரிக்கை, அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story