நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு


நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 July 2019 10:45 PM GMT (Updated: 30 July 2019 8:56 PM GMT)

மக்களவையில் நேற்று நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

புதுடெல்லி,

நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மக்களவையில் கடந்த 8-ந்தேதி தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது நடந்த விவாதங்களுக்கு அவர் நேற்று பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பதே இந்த மசோதாவின் ஒட்டுமொத்த நோக்கம் ஆகும். நுகர்வோர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நிவாரண கமிஷன்கள் அமைக்கப்படும். மேலும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாத்தல், மேம்படுத்துதல் போன்றவற்றுக்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைக்கவும் இந்த மசோதா வழிவகை செய்யும்’ என்று கூறினார்.

தவறான விளம்பரங்கள் மூலம் நுகர்வோருக்கு பொய் தகவல்களை அளித்தல் அல்லது அவர்களை தவறாக வழிநடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பஸ்வான், இந்த விவகாரத்தில் விளம்பரங்களை ஒளிபரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அந்த விளம்பரதாரர் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக இந்த மசோதா மீது நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சிகள், மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. குறிப்பாக, காங்கிரஸ் உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கூறும்போது, இந்த மசோதா நுகர்வோரின் சுதந்திரத்தை பறித்து, அவர்களது உரிமைகளை நசுக்குவதாக குற்றம் சாட்டினார். நுகர்வோரின் உண்மையான பிரச்சினைகளை கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

எனினும் இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மக்களவையில் பின்னர் நிறைவேறியது. இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு நிராகரித்தது.

இந்த மசோதா மூலமாக அமைக்கப்படும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், நுகர்வோரின் தனிநபர் புகார்களையும் உடனடியாக விசாரிக்கும். இதன் மூலம் தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதமும், 2 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. தொடர்ந்து ஒரே நிறுவனம் தவறிழைத்தது தெரியவந்தால் ரூ.50 லட்சம் வரை அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறையும் விதிக்க இந்த மசோதா வழி செய்வது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல ஊதியக்குறியீடு மசோதாவும் மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதா மூலம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படுவதுடன், தொழிலாளர்களின் சம்பள தாமதம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இந்த மசோதா உதவும் என தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்தார்.


Next Story