‘குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை’ - மாணவர்கள் குற்றச்சாட்டு


‘குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை’ - மாணவர்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Aug 2019 9:09 PM GMT (Updated: 5 Aug 2019 9:09 PM GMT)

குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், இந்த விவகாரம் மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கை என்று டெல்லியில் உள்ள நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.

அந்த பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் பொதுச் செயலாளர் ஏஜாஸ் அகமது ராதர் கூறுகையில், ‘இது அரசியலமைப்பிற்கு விரோதமானது, நாடாளுமன்ற தளத்திலிருந்து சர்வாதிகாரம் செய்யப்படுகிறது. நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எனது குடும்பத்தினருடன் பேசியபோது, அவர்கள் தயவு செய்து எங்களை ஒரு முறை வந்து பாருங்கள். எங்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று அழுது புலம்பினர். அவர்களை தொடர்பு கொள்ளும் அனைத்து சாதனங்களையும் முடக்கியுள்ளதால், எங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளக்கூட முடியவில்லை’ என்றார்.

இதேபோன்று மாணவர்கள் பலரும் தங்களது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. காஷ்மீர் மாநிலம் மட்டுமின்றி அந்த மாநிலத்தில் வாங்கிய அனைத்து செல்போன் ‘சிம்’களும் முடக்கப்பட்டுள்ளன என்றனர். மேலும் மாநில தலைவர்களே வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் இருக்கும்போது, எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அங்கு எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றும் கூறினர்.


Next Story