ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பலனளிக்காது: ராகுல்காந்தி காட்டம்


ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பலனளிக்காது: ராகுல்காந்தி காட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2019 7:24 AM GMT (Updated: 27 Aug 2019 10:46 PM GMT)

பொருளாதார சீரழிவை சரிசெய்ய தெரியாமல் பிரதமர் தவித்து வருகிறார். ரிசர்வ் வங்கி பணத்தை திருடுவது பலன் தராது என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கி கையிருப்பில் உபரியாக உள்ள ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி வாரியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமரும், மத்திய நிதி மந்திரியும் தாங்களே உருவாக்கிய பொருளாதார சீரழிவுக்கு எப்படி தீர்வு காண்பது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் திருடுவது பலன் தராது. இது எப்படிப்பட்டது என்றால், மருந்தகத்தில் இருந்து பிளாஸ்திரியை திருடி, துப்பாக்கி குண்டு காயத்தின் மீது ஒட்டுவது போன்றது ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியிருப்பதாவது:-

ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் பெறுவது விவேகமான நடவடிக்கையா என்று தெரியவில்லை. இந்த பணம், பா.ஜனதாவின் பணக்கார நண்பர்களை காப்பாற்ற பயன்படுத்தப்படுமா? ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி, பட்ஜெட் மதிப்பீட்டில் காணாமல் போன ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியுடன் ஒத்துப்போகிறது. இது தற்செயலாக நடந்த நிகழ்வா?

போர் போன்ற அவசர காலங்களில் பயன்படுத்த ரிசர்வ் வங்கி வைத்திருந்த நிதியை மத்திய அரசு, தனது தவறுகளை மறைக்க பயன்படுத்த போகிறது. ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை அழித்து விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கியின் லாபத்தில் 99 சதவீத பணத்தை மத்திய அரசு அபகரித்து வருகிறது. இப்போது, மோடியின் நண்பர்களால் கொள்ளையடிக்கப்பட்ட வங்கிகளில் மறுமூலதனத்துக்காக ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை வாங்குகிறது.

பொதுத்துறையை சேர்ந்த நவரத்தினா நிறுவனங்கள் நிலைமை மோசமாக உள்ளது. அனைத்து தரப்பினரும் பாதிப்பு அடைந்துள்ளனர். பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் இதற்கு முன்பு எப்போதும் இந்த அளவுக்கு தாக்குதலை எதிர்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story