காஷ்மீர் விவகாரம்: ‘மிகமோசமான பொறுப்பற்ற அரசியல்' ராகுல் காந்தியை கடுமையாக சாடிய மத்திய அரசு


காஷ்மீர் விவகாரம்: ‘மிகமோசமான பொறுப்பற்ற அரசியல் ராகுல் காந்தியை கடுமையாக சாடிய மத்திய அரசு
x
தினத்தந்தி 28 Aug 2019 1:21 PM GMT (Updated: 28 Aug 2019 1:21 PM GMT)

காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தி மிகவும் மோசமான பொறுப்பற்ற அரசியலை மேற்கொள்கிறார் என மத்திய அரசு விமர்சனம் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் அங்கு பிரவேசிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி பேசுகையில், கொடூரமான நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இருக்கின்றன. அடக்குமுறை சக்திகளால் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். காஷ்மீரில் நடக்கும் கலவரத்தால் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பேசியிருந்தார். 

இதனை குறிப்பிட்டு பாகிஸ்தான், ஐ.நா.விற்கு கடிதம் எழுதியது. இதனால் ராகுல் காந்திக்கு எதிராக கடுமையான விமர்சனம் எழுந்தது.
  
இந்நிலையில் டுவிட்டரில் ராகுல் காந்தி,  "காஷ்மீர் எங்களின் உள்நாட்டுப் பிரச்சினை, அதில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது" என குறிப்பிட்டார். இதனையடுத்து ராகுலின் இரட்டை பேச்சை மத்திய அரசு விமர்சனம் செய்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரின் கருத்துகள் நாட்டை அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டதாக உள்ளது. இப்போது பாகிஸ்தானுக்கு உதவியுள்ளார். காஷ்மீரில் வன்முறை நடக்கிறது என்றும், அதனால் மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும் கூறியதற்கு ராகுலும், காங்கிரசும் மன்னிப்பு கோர வேண்டும். 

இது மிகமோசமான பொறுப்பற்ற அரசியல் என்பதை மக்கள் கவனித்து வருகிறார்கள். தவறான கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி, அரசியல் சூழல் மற்றும் மக்களின் அழுத்தம் காரணமாக திடீரென மாற்றி பேசியுள்ளார். காஷ்மீரில் வன்முறை நடக்கிறது என்ற ராகுல் காந்தியின்  குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. தேர்தலில், வாக்கு வங்கி அரசியலுக்காகவே அந்த கட்சி இவ்வாறு நடக்கிறது என்று கூறியுள்ளார்.

Next Story