குஜராத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் - கட்ச் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பு


குஜராத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் - கட்ச் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2019 7:12 AM GMT (Updated: 29 Aug 2019 8:53 PM GMT)

குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுப்பிரிவு தகவல் கிடைத்துள்ளதால், கட்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காந்திநகர்,

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பாகிஸ்தான் பல்வேறு வகையிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் மீது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத சக்திகளும், அந்நாட்டு அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளும் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதுபற்றி உள்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாகிஸ்தானில் உள்ள மற்றும் அந்நாட்டு அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத சக்திகள் குஜராத் மாநிலத்தில் ஊடுருவி முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. குஜராத் கடலோர பகுதியில் குறிப்பாக கட்ச் கடலோர பகுதியில் தண்ணீருக்கு அடியிலேயே வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டன. மத்திய தொழில் பாதுகாப்பு படை, கடலோர காவல்படை, எல்லை பாதுகாப்பு படை, மாநில போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார் உள்பட பல பிரிவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் உளவுப்பிரிவினரும் தொடர்பில் இருந்து வருகிறார்கள். கட்ச் கடலோர பகுதியிலும், மாநிலத்தின் உள்பகுதியிலும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்ட்லா, முந்த்ரா துறைமுகங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எத்தகைய தாக்குதல் நடத்த முயற்சித்தாலும் அதனை எதிர்கொள்ள கமாண்டோ படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பை பலப்படுத்த இதர பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் ஊடுருவ நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


Next Story