தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி ஒதுக்க வேண்டும் - மத்திய மந்திரியிடம் ஹஜ் கமிட்டி தலைவர் வலியுறுத்தல்


தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி ஒதுக்க வேண்டும் - மத்திய மந்திரியிடம் ஹஜ் கமிட்டி தலைவர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Aug 2019 9:45 PM GMT (Updated: 30 Aug 2019 8:40 PM GMT)

சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் ஹஜ் கமிட்டி தலைவர் வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மத்திய சிறுபான்மை விவகாரத் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வியை இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

அப்போது அவர் மத்திய மந்திரியிடம், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை மக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.1,000 கோடி கூடுதலாக ஒதுக்கவேண்டும்’ என்றும் இதன்மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிறிஸ்தவ, இஸ்லாமிய, ஜெயின், சிங், பார்சிய சமூகம் சார்ந்த சிறுபான்மை மக்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒரு உயர்ந்த நிலையை எட்ட முடியும்’ என்று வலியுறுத்தினார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களுடைய பொருளாதார வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மத்திய மந்திரியும் அதற்கு சம்மதம் தெரிவித்து கூடுதல் நிதி ஒதுக்க அரசிடம் பேசி ஒரு நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மத்திய மந்திரியை தமிழகத்திற்கு வருமாறு அபூபக்கர் அழைப்பு விடுத்தார்.


Next Story