மத்திய பிரதேசத்தில் பயங்கரம்: தலித் சிறுவர்கள் 2 பேர் அடித்துக்கொலை - மாயாவதி கடும் கண்டனம்


மத்திய பிரதேசத்தில் பயங்கரம்: தலித் சிறுவர்கள் 2 பேர் அடித்துக்கொலை - மாயாவதி கடும் கண்டனம்
x
தினத்தந்தி 25 Sep 2019 9:15 PM GMT (Updated: 25 Sep 2019 7:52 PM GMT)

மத்திய பிரதேசத்தில் தலித் சிறுவர்கள் 2 பேர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிவ்புரி,

மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்துக்கு உட்பட்ட பாவ்கேதி கிராமத்தை சேர்ந்த ரோ‌‌ஷனி பால்மிகி (வயது 12), அவினா‌‌ஷ் பால்மிகி (10) ஆகிய 2 சிறுவர்கள், நேற்று காலையில் அங்குள்ள பஞ்சாயத்து கட்டிடத்துக்கு முன் திறந்தவெளியில் மலம் கழித்ததாக தெரிகிறது.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சகோதரர்களான ரமே‌‌ஷ்வர் யாதவ், ஹக்கிம் யாதவ் ஆகிய இருவரும் அந்த சிறுவர்களை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த சிறுவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரமே‌‌ஷ்வர் மற்றும் ஹக்கிம் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மாநிலத்தில் தலித் பிரிவினருக்கு போதுமான கழிவறை வசதிகளை ஏற்படுத்த தவறியமைக்காக மாநிலத்தில் அடுத்தடுத்து அமைந்த பா.ஜனதா, காங்கிரஸ் அரசுகள் மீதும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story