இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்து முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன்? - ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்திடம் இந்தியா கேள்வி


இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்து முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன்? - ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்திடம் இந்தியா கேள்வி
x
தினத்தந்தி 3 Nov 2019 3:30 AM IST (Updated: 3 Nov 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

இந்தியர்களின் ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் திருடப்பட்டது குறித்து முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன்? என்று அந்த நிறுவனத்துக்கு இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரது ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் அவர்களது செல்போன்களில் ஊடுருவி திருடப்பட்டதாக அந்த நிறுவனம் 3 நாட்களுக்கு முன்பு தெரிவித்தது.

கடந்த மே மாதம் இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருளை பயன்படுத்தி சில உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள 1,400 பேரின் தகவல்களை திருடியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்தவர்களும் அடக்கம் என்று அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் கூறியிருந்தது.

இந்த பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டது என்றும், இதுபற்றி இந்தியா மற்றும் இதர நாட்டு அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் பதில் அளித்தது.

இந்த சம்பவத்துக்காக காங்கிரஸ் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மத்திய அரசின் பல நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளதற்கு மத்தியில், அரசு தனது நாட்டு மக்களிடமே பொய் சொல்வதற்கு தயங்குவது இல்லை. அரசுக்கு இந்த தகவல் திருட்டு பற்றி தெரியும் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்து முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன்? என்று ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறும்போது, “கடந்த ஜூலை, செப்டம்பர் மாதங்களில் தகவல்கள் கண்டுபிடிப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துடன் இந்திய அதிகாரிகள் உயர்மட்ட ஆலோசனை கூட்டங்கள் நடத்தினர். மே மாதம் நடந்த தகவல் திருட்டு குறித்து அப்போதே தெரிவிக்காதது ஏன்? இந்த உண்மை மறைக்கப்பட்டதில் இந்தியர்களின் தலையீடு உள்ளதா? என்று அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்றனர்.


Next Story