கர்நாடகாவில் ஏரி உடைந்து 2,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


கர்நாடகாவில் ஏரி உடைந்து 2,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 24 Nov 2019 9:26 PM GMT (Updated: 24 Nov 2019 9:26 PM GMT)

கர்நாடகாவில் உள்ள உளிமாவு ஏரி உடைந்து 2,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பன்னரகட்டா அருகே உளிமாவு ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்த ஏரியின் கரைப்பகுதியில் குழாய் பதிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. குழாய் பதிப்பதற்காக அங்கு பொக்லைன் வாகனம் மூலம் மண் அள்ளப்பட்டது. மேலும் ஏரியில் இருந்த தண்ணீரை வேறு பகுதிக்கு திருப்பி விடும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்ததாக தெரிகிறது.

நேற்று மாலை திடீரென ஏரியின் ஒரு பகுதியின் கரை உடைந்தது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வெளியேறி ஓடியது. ஊழியர்களால் உடைப்பை சரி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக ஏரியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறி உளிமாவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தண்ணீரில் மூழ்கின. கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படை வீரர்கள் மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிகள் நள்ளிரவு வரை நீடித்தது.


Next Story