52 எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்-தேசியவாத காங்கிரஸ்


52 எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்-தேசியவாத காங்கிரஸ்
x
தினத்தந்தி 25 Nov 2019 3:03 AM GMT (Updated: 25 Nov 2019 3:03 AM GMT)

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 52 எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் நிலவிய அரசியல் குழப்பம் காரணமாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்தன. ஆனால் அதிரடி திருப்பமாக நேற்றுமுன்தினம் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. 2-வது முறையாக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரி ஆனார். வருகிற 30-ந் தேதிக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் ‘கெடு’ விதித்து உள்ளார்.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாரதீய ஜனதாவுக்கு குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவிடம் 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்களும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சிறிய கட்சிகளுக்கு 16 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் உள்ளனர்.

பாரதீய ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளநிலையில், அக்கட்சி தலைமையில் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்து துணை முதல்-மந்திரியான அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரசின் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை. எனவே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது பாரதீய ஜனதாவுக்கு பெரிய சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. 

 குதிரை பேரத்தில் சிக்கிவிடாமல் இருப்பதற்காக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ள சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த ஓட்டல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்கிடையே, இன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக்,  எங்கள் கட்சியைச் சேர்ந்த 52 எம்.எல்.ஏக்கள், எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.  மேலும், ஒரு எம்.எல்.ஏ எங்களுடன் தொடர்பில் உள்ளார்” என்றார். 

Next Story