நாடு முழுவதும் நடைபெறும் தொடர் போராட்டங்களால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் இழப்பு


நாடு முழுவதும் நடைபெறும் தொடர் போராட்டங்களால்  தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் இழப்பு
x
தினத்தந்தி 28 Dec 2019 6:22 AM GMT (Updated: 28 Dec 2019 6:22 AM GMT)

வன்முறைகள் பரவாமல் தடுப்பதற்காக இணைய சேவை துண்டிக்கப்படுகிறது. இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன.

புதுடெல்லி,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டது மற்றும் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டு பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வதந்திகள் பரப்பப்பட்டு வன்முறை வெடிக்காமல் இருப்பதை தவிர்க்கும் வகையில், இணைய சேவைகளை முடக்கி  அரசு நடவடிக்கை எடுத்தது. 

ஜம்மு காஷ்மீரில், 100 நாட்களுக்கும் மேலாக இணைய சேவைகள் முடக்கப்பட்டன.  145 நாட்களுக்கு பிறகு கார்கில் பகுதியில் நேற்று முதல் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது.  அதேபோல், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டதால், இணைய சேவை கட்டுப்படுத்தப்பட்டது. 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த 3 வாரங்களாகவே நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளது. இதனால், போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு உத்தரவின் பேரில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைய சேவையை முடக்கி வருகின்றன. 

இந்த நிலையில், இணைய சேவை முடக்கங்களால் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2.5 கோடி ரூபாய் அளவிற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக தொலைத்தொடர்பு நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.  உலக அளவில் இந்தியர்கள்தான் அதிக அளவு இணைய சேவையை பயன்படுத்துவதாக சமீபத்தில் சுவீடனை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டிருந்தது. இந்த தரவுகளின் படி, சராசரியாக இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு 9.8 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story