மராட்டியத்தில் சட்ட மேலவை தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம்


மராட்டியத்தில் சட்ட மேலவை  தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம்
x
தினத்தந்தி 30 April 2020 3:01 PM GMT (Updated: 30 April 2020 3:01 PM GMT)

மராட்டியத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், சட்ட மேலவை தேர்தலை நடத்த கவர்னர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி ஏற்று 5 மாதங்கள் ஆகியும் அரசியலமைப்பு விதியின்படி இன்னும் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது மேல்-சபை உறுப்பினரான எம்.எல்.சி.யாகவோ ஆகாமல் இருக்கிறார். இன்னும் ஒரு மாதத்தில் அதாவது அடுத்த மாதம் (மே) 28-ந் தேதிக்குள் அவர் மேற்கண்ட இரண்டில் ஏதாவது ஒரு பதவிக்கு தேர்வாக வேண்டும்.

கடந்த 24-ந் தேதி நடைபெறுவதாக இருந்த எம்.எல்.சி. தேர்தல் மூலம் தனது பதவியை தக்கவைத்து கொள்ள உத்தவ் தாக்கரே திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இது உத்தவ் தாக்கரேக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 2 எம்.எல்.சி. பதவிகளில் ஒன்றில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க கோரி கடந்த 9-ந் தேதி மாநில மந்திரிசபை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அந்த பரிந்துரை மீது கவர்னர் முடிவு எடுக்கவில்லை.  இது உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. 

இதற்கு மத்தியில், நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, மராட்டியத்தில் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற பிரச்சினையை பிரதமர் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும்  தகவல்கள் வெளியாகின. 

இந்த பரபரப்பான அரசியல் சூழலில்,  எம்.எல்.சி (மேல் சபை) தேர்தலை அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதியுள்ளார்.  கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் மேல்சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று கவர்னர் தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மராட்டிய சட்ட மேலவையில் 9 இடங்கள் காலியாக உள்ளன. 

Next Story