அனைத்து நேரமும் பாதுகாப்பு குறித்து பேசிவரும் மோடி அரசை காணவில்லை - காங்கிரஸ் விமர்சனம்

காஷ்மீரில் அனைத்து துறையிலும் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
புதுடெல்லி,
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்து மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களை குறிவைத்தும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை குறிவைத்தும் பயங்கரவாதிகள் திட்டமிட்ட தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் பொதுமக்கள் 11 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து வெளிமாநில மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரில் அனைத்து துறையிலும் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறுகையில், காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் இருந்து நம்பிக்கை வெளியேறி வருகிறது. அனைத்து நேரமும் பாதுகாப்பு குறித்து பேசிவரும் மோடி அரசை காணவில்லை.
சிறப்பு அந்தஸ்து 370-ஐ நீக்கியதால் காஷ்மீரில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக மோடி அரசு கூறியது. ஆனால், காஷ்மீரில் தற்போதைய நிலைமையை அனைவரும் அறிந்துள்ளனர் மேலும் அச்சப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் ஜம்மு-காஷ்மீரின் நிலைமை மோசமாகி வருகிறது. காஷ்மீர் மற்றும் காஷ்மீரி மக்கள் ஆபத்தில் உள்ளனர். காஷ்மீரை வைத்து பல ஆண்டுகளாக அரசியல் செய்துவந்த பாஜக தற்போது எங்கு உள்ளது என்று யாருக்கும் தெரியவில்லை’ என்றார்.
Related Tags :
Next Story