பாகிஸ்தானின் வெற்றியை காஷ்மீரிகள் கொண்டாடினால் ஏன் இவ்வளவு கோபம்? - மெகபூபா கேள்வி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Oct 2021 8:14 AM GMT (Updated: 26 Oct 2021 8:14 AM GMT)

பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்த கோலியைப் போல, ஏற்கும் மனநிலையை வளர்ப்போம் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர், 

துபாயில் நேற்று முன்தினம் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.  பாகிஸ்தான் வரலாற்று வெற்றி பெற்றதை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். 

இந்த சூழலில் பாகிஸ்தான் வெற்றியை இந்தியாவில் உள்ள காஷ்மீர் மக்களும் கொண்டாடினர். இதனால் காஷ்மீரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை கடுமையாக விமர்சித்து பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடினால் காஷ்மீரிகள் மீது ஏன் இவ்வளவு கோபம்? என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீரிகள் மீது ஏன் இவ்வளவு கோபம்? சிலர் கொலைவெறிக் கோஷங்களையும் எழுப்புகிறார்கள். துரோகிகளைச் சுட வேண்டும் என்று கூறுகிறார்கள். காஷ்மீர் துண்டாக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டபோது எத்தனை பேர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் என்பதை யாரும் மறந்துவிடவில்லை என்றும், தனது மற்றொரு டுவிட்டில், “பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு முதலில் வாழ்த்து தெரிவித்து சரியான எண்ணத்தை வெளிப்படுத்திய விராட் கோலியைப் போல, எதிர்ப்பு என்ற எண்ணத்தில் இருந்து ஏற்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வோம்” என்று மெகபூபா முப்தி பதிவிட்டிருந்தார்.




Next Story