மராட்டியம்; 3 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை..!


மராட்டியம்; 3 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை..!
x
தினத்தந்தி 27 Oct 2021 3:29 AM GMT (Updated: 27 Oct 2021 4:17 AM GMT)

3 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி மராட்டிய மாநிலம் புதிய சாதனை படைத்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் 3 கோடி மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  முடிவடைந்த தடுப்பூசி நிலவரப்படி, மாநிலத்தில் 3 கோடி மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவலை அம்மாநில முதல்வர் அலுவலகம் நேற்று மாலை தெரிவித்துள்ளது.

இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“இன்று மராட்டிய மாநிலம், நாட்டிலேயே உச்சபட்சமாக 3 கோடி மக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒரு புதிய மைல்கல்லை தாண்டியுள்ளது. இது நம்முடைய சுகாதார அமைப்புக்கு ஒரு மாபெரும் சாதனையாகும். நாம் ‘முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடும்பங்கள் =  முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மராட்டியம்’ என்னும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, இதுவரை 103 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.முன்னதாக, தயக்கம் காட்டும் மக்களை தடுப்பூசி போட வைப்பது சவாலானது என்னும் கருத்தை மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அம்மாநிலம் தடுப்பூசி செலுத்துவதில் இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மராட்டியத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தாலும், தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் மேலாகவே பதிவாகி வருகிறது. அங்கு நேற்று புதிதாக 1,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை மாநிலத்தில் 22,981 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story