பாலியல் புகாரில் சிக்கியுள்ள மந்திரி யார்? கோவாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள விவகாரம்


பாலியல் புகாரில் சிக்கியுள்ள மந்திரி யார்? கோவாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள விவகாரம்
x
தினத்தந்தி 30 Nov 2021 4:38 PM GMT (Updated: 30 Nov 2021 4:38 PM GMT)

கோவாவில் பதவியில் இருக்கும் ஒரு மந்திரியின் பெயரை குறிப்பிடாமல் அவர் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவா,

கோவாவில்  யூனியன் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. கோவா மாநில அரசின் மந்திரி சபையில் முதல்-மந்திரி நீங்கலாக 12 பேர் மந்திரிகளாக உள்ளனர். அதில் ஒருவர் மட்டுமே பெண், மீதமுள்ளவர்கள் அனைவரும் ஆண்கள்.

இந்நிலையில், கோவாவில் பதவியில் இருக்கும் ஒரு மந்திரியின் பெயரை குறிப்பிடாமல் அவர் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிரிஷ் சோடங்கர் இந்த குற்றம் சாட்டியுள்ளார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அம்மாநில முதல்-மந்திரிக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தும் கண்டு கொள்ளாமல் உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளுங்கட்சியான பா.ஜ.க இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

பிரதமர் மோடி டிசம்பர் 19ம் தேதி கோவா செல்ல உள்ள நிலையில், இன்னும் 15 நாட்களுக்குள் அந்த மந்திரியை பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்காவிட்டால், காங்கிரஸ் சார்பில் புகைப்படம், அவர் பேசிய வாட்ஸ் ஆப் தகவல்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் சோடங்கர் கூறியுள்ளார்.

அந்த அமைச்சர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒரு பெண்ணை வற்புறுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளார். கோவாவின் முதல்-மந்திரி போலீசாரை வைத்து சாட்சியங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார். 20 நாட்களுக்கு முன் இரண்டு நபர்கள் தன்னிடம் இந்த ஆதாரங்களை கொண்டுவந்து காண்பித்தனர் என்றும் சோடங்கர் கூறியுள்ளார். 

கோவா மாநில பா.ஜ.க தலைவர் இந்த குற்றச்சாட்டுக்களை பொய்யானவை என்று மறுத்துள்ளார். முதல்-மந்திரியையும் சேர்த்து மொத்தம் 12 ஆண்கள் மந்திரி சபையில் உள்ளனர். இதில் அவர் யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. எந்த ஒரு புகாரும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. அவர் அந்த மந்திரியின் பெயரையும், பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண் யார் என்பதையும் குறிப்பிடவில்லை. எனவே, இது ஆதாரமில்லாத அர்த்தமற்ற குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார். 

Next Story