டெல்லியில் 6 தொகுதிகளை கேட்கும் ஆம் ஆத்மி; 1 தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடிவு


டெல்லியில் 6 தொகுதிகளை கேட்கும் ஆம் ஆத்மி; 1 தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடிவு
x

வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், டெல்லியில் 6 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில் எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இதனிடையே டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், 1 தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. மேலும் குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும், கோவாவில் ஒரு தொகுதிக்கும் ஆம் ஆத்மி கட்சி தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மி எம்.பி. சந்தீப் பதக் கூறியதாவது;-

"ஆம் ஆத்மி சார்பில் தெற்கு கோவா தொகுதியில் வென்சி விகாஸ் போட்டியிடுவார். அதே போல் குஜராத்தின் பருக் தொகுதியில் சைத்தர் வசாவா, பாவ்நகர் தொகுதியில் உமேஷ் பாய் மக்வானா ஆகிய ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

சமீபத்திய தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், டெல்லியில் 6 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட விரும்புகிறது. அதே போல் காங்கிரஸ் கட்சிக்கு அதன் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஒரு தொகுதியை வழங்க விரும்புகிறோம்.

தற்சமயம் டெல்லிக்கு எந்த வேட்பாளரையும் நாங்கள் அறிவிக்கவில்லை. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக 'இந்தியா' கூட்டணியில் விரைவாக பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றால், நாங்கள் டெல்லியில் உள்ள 6 இடங்களுக்கான வேட்பாளர்களையும் அறிவிப்போம்."

இவ்வாறு ஆம் ஆத்மி எம்.பி. சந்திப் பதக் கூறினார்.


Next Story