பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்


பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:47 PM GMT)

பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.15 கோடி போதைப்பொருட்களை விமானத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு :-

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது எத்தியோபியாவில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணியின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அந்த பயணியை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அவரது உடைமைகளை போலீசார் பரிசோதனை செய்தார்கள். அப்போது பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் இருந்தது.

அதனை எடுத்து பார்த்த போது, அதற்குள் கொகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்தார்கள். அவர் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த 40 வயது நபர் என்று தெரிந்தது.

இந்தியாவுக்கு சுற்றுலா விசா மூலம் வந்திருந்ததும் தெரிந்தது. எத்தியோபியாவில் இருந்து கொகைன் போதைப்பொருட்களை பெங்களூரு வழியாக டெல்லிக்கு அவர் கடத்தி செல்ல முயன்றதும் தெரிந்தது.

அவரிடம் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஜிம்பாப்வே நாட்டுக்காரர் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story
  • chat