எஸ்.டி.சோமசேகருக்கு அமித்ஷா திடீர் அழைப்பு


எஸ்.டி.சோமசேகருக்கு அமித்ஷா திடீர் அழைப்பு
x

டெல்லிக்கு வரும்படி எஸ்.டி.சோமசேகருக்கு அமித்ஷா திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.

பெங்களூரு:

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி ஆபரேசன் கை திட்டம் மூலம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை இழுக்க திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. அதன்படி பா.ஜனதாவை சேர்ந்த பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான எஸ்.டி.சோமசேகரும் காங்கிரசில் இணைவார் என தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் அவர் மறுத்து வருகிறார். மேலும் யஷ்வந்தபுரம் தொகுதியில் தனக்கு எதிராக பா.ஜனதாவினர் செயல்படுவதாக எஸ்.டி.சோமசேகர் அதிருப்தியில் உள்ளார்.

அவர் காங்கிரசுக்கு சென்றால், அவருடன் கூட்டணி ஆட்சியின் போது ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்த சிலரும் காங்கிரசில் சேரலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே அவரை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் பா.ஜனதா தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் எஸ்.டி.சோமசேகரை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவரை நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக எஸ்.டி.சோமசேகர் அன்றைய தினம் டெல்லி செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது. முதலில் அவர் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோசை சந்தித்து பேசுவார் எனவும், அதன்பிறகு அமித்ஷாவை அவர் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story