தூய்மையற்ற நகரமாக மாறிவரும் பெங்களூரு!


தூய்மையற்ற நகரமாக மாறிவரும் பெங்களூரு!
x

தூய்மையான நகரங்களின் பட்டியலில் 43-வது இடத்திற்கு பெங்களூரு தள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

தூய்மையான நகரங்களின் பட்டியலில் 43-வது இடத்திற்கு பெங்களூரு தள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

குப்பை பிரச்சினை

தகவல் தொழில் நுட்ப நகரம் என்ற சிறப்பை கொண்ட பெங்களூரு வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஏற்ப பெங்களூரு நகரில் புதுப்புது பிரச்சினைகளும் உருவாகி வருகிறது. பெங்களூருவில் முதலில் 100 வார்டுகள் மட்டுமே இருந்தது. பின்னர் 198 வார்டுகளாக உயர்த்தப்பட்டது. தற்போது பெங்களூரு மாநகராட்சியின் வார்டுகள் 198-ல் இருந்து 243 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

நகரின் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றார் போல் பெங்களூரு மாநகரமும் பரந்து விரிந்து சென்ற வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு, குப்பை பிரச்சினை மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் குப்பை பிரச்சினை தலை விரித்தாடுகிறது. கடந்த பல ஆண்டுக்கு முன்பு பெங்களூருவில் குவிந்த குப்பைகள் குறித்து வெளிநாடுகளிலும் செய்தி வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருந்தது.

பொது இடங்களில் குப்பைகள்

குப்பை பிரச்சினை காரணமாக பெங்களூரு நகரின் அழகுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றால் மிகையல்ல. ஏனெனில் கண்ட, கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்றால் மட்டுமே குப்பைகள் இல்லாமல் சுத்தமாக காட்சி அளிக்கிறது. ஆனால் பெரும்பாலான பகுதிகள் குப்பை மேடாகவும், சாலைகளிலும் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு முகம் சுழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை உலர்ந்தது, உலராதது என பிரித்து கொடுக்க மாநகராடசி உத்தரவிட்டுள்ளது. வீடுகள், கடைகள், பிற வணிகவளாகங்களில் குவியும் குப்பைகளை மாநகராட்சியின் துப்புரவு தொழிலாளர்களே நேரில் சென்று வாங்கி செல்லும் வழக்கம் உள்ளது. அப்படி இருந்தும் முக்கியமான பகுதிகளில் குப்பை தொட்டிகள் இல்லாததால் ஆங்காங்கே குப்பை, இறைச்சி கழிவுகள் வீசப்படுவதால் அசுத்தமாகவும், தூய்மை இல்லாமலும் காணப்படுகிறது.

தூய்மை நகரங்களின் பட்டியல்

பெங்களூரு நகரில் உள்ள மார்க்கெட்டுகளின் நிலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்கு மார்க்கெட்டுகளுக்கு சென்றால் தூய்மை என்பது என்ன விலை என கேட்க தோன்றும். காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் மார்க்கெட்டுகள் குப்பை கூளமாகவும், அங்குள்ள சாலைகள் சேறும், சகதியுமாகவும் தூய்மை இல்லாமல் காணப்படுகிறது. இதுபோன்று குப்பை பிரச்சினைகள் குறித்து சொல்லிக் கொண்டே செல்லலாம்.

இதற்கிடையில், கடந்த 2016-ம் ஆண்டில் இருந்தே தூய்மையான நகரங்கள் பற்றி மத்திய அரசு ஆய்வு நடத்தி, அதற்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதாவது நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் 45 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த 45 நகரங்களில் பெங்களூருவும் ஒன்றாகும்.

பெங்களூருவுக்கு 43-வது இடம்

அதன்படி, கடநத 2021-ம் ஆண்டு தூய்மையான நகரங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில், பெங்களூருவுக்கு 28-வது இடம் கிடைத்திருந்தது. இது மற்ற நகரங்களை காட்டிலும் பெங்களூரு முன்னிலையில் இருந்தது. இந்த ஆண்டு (2022) நடத்தப்பட்ட ஆய்வில் பெங்களூருவுக்கு 43-வது இடம் கிடைத்திருக்கிறது. அதாவது 28-வது இடத்தில் இருந்து 43-வது இடத்திற்கு பின்னோக்கி தள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பெங்களூரு தூய்மை இல்லாமல், குப்பை கழிவுகளுடன் அசுத்தமாக இருப்பதாகும்.

தகவல் தொழில் நுட்ப நகரம், பூங்கா நகரம் என்ற பல்வேறு பெருமைக்கு சொந்தமான பெங்களூருவில், தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும், பெங்களூருவில் குப்பைகளை அகற்றுவது, தூய்மையாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தாமல் இருந்தால் அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் ஆய்வில் கடைசி இடமான 45-வது இடத்திற்கு செல்லவும் வாய்ப்புள்ளது என்று மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

18 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள்

பெங்களூரு மாநகராட்சிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடைபெறவில்லை. இதன் காரணமாக வார்டுகளுக்கு கவுன்சிலர்கள் இல்லை. மக்கள் தங்கள் பிரச்சினைகளையோ, குப்பைகள் குவிந்து கிடப்பது பற்றியோ கவுன்சிலர்களிடம் தெரிவிக்கவோ, அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லவோ முடியாத நிலை இருக்கிறது. அதிகாரிகளிடம் மக்கள் தெரிவித்தாலும், சரியான நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

பெங்களூருவில் குப்பைகள், கழிவுகளை அகற்றுவதற்காக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர். பெங்களூருவில் ஒரு நாளுக்கு சராசரியாக 4 ஆயிரம் டன் குப்பைகள் சேருகிறது. அதுவும் ஏதேனும் பண்டிகைகள் வந்து விட்டால் பூஜை பொருட்களான பூக்கள், வாழைக்கன்று கழிவுகள் என கூடுதலாக 1,000 டன் குப்பைகள் குவிந்து விடுகிறது. இதுபோன்ற குப்பைகள் குவிவதும், அதனை உடனடியாக அகற்றாமல் இருப்பதாலும் பெங்களூரு தூய்மையற்ற நகரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் பெங்களூருவில் குவியும் குப்பைகளை பெங்களூரு அருகே உள்ள கிராமங்களிலும் கொட்டுவதற்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் பெங்களூரு நகரம் தூய்மையை இழந்து வருகிறது. தூய்மை நகரமாக பெங்களூருவை மாற்ற மாநகராட்சியும், அரசும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்களும் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்தால் மட்டுமே தூய்மையான நகரமாக பெங்களூரு மாறும் சூழ்நிலை உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு தூய்மையற்ற நகரமாக மாறி வருவது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

குப்பைகளை நிர்வகிப்பதில் தோல்வி

இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த ஜெகதீஷ் கூறும் போது, "பெங்களூருவில் குப்பைகளை நிர்வகிப்பதில் மாநகராட்சி முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. பெங்களூருவில் டன் கணக்கில் குப்பைகள் குவிகிறது. அவற்றை சரியாக கையாளுவதில்லை. குப்பை விவகாரத்திலும் ரூ.1,500 கோடி முறைகேடு நடந்திருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பெங்களூருவை எப்படி தூய்மையான நகரமாக மாற்ற முடியும். பெங்களூருவில் தினமும் குவியும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். நகரின் அனைத்து சாலைகளிலும் குப்பை தொட்டிகள் வைத்து, அதில் சேரும் குப்பைகளை அள்ள வேண்டும். இதற்கான துரிதமான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே பெங்களூருவை தூய்மையான நகரமாக மாற்ற வாய்ப்புள்ளது" என்றார்.

இதுபற்றி வியாபாரி கே.பழனி கூறும் போது, "பெங்களூரு உலகின் தலைசிறந்த நகரமாக உள்ளது. இங்கு தூய்மை என்பது அவசியம். தூய்மை இல்லாவிட்டால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தேவையில்லாத நோய்கள் பரவும். இது மக்களுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பெங்களூரு நகரை தூய்மையாக வைத்து கொள்வது அவசியமாகும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சியும், அரசும் எடுக்க வேண்டும். மக்களும் பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டாமல் பெங்களூரு நகரை தூய்மையாக வைத்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

சுத்தம் செய்ய நடவடிக்கை

இதுகுறித்து கலாசி பாளையம் மார்க்கெட் தலைவர் கோபி கூறுகையில், "பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் பெங்களூருவுக்கு என்று தனிச்சிறப்பு இருக்கிறது. பெங்களூருவில் பல்வேறு இடங்களில் தூய்மை இல்லாமல் இருப்பது உண்மைதான். தூய்மையான நகரங்களில் முதன்மை இடத்தை பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏனெனில் மக்களிடம் விழிப்புணர்வு வந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

கலாசிபாளையம் உள்ளிட்ட மார்க்கெட்டுகளும் தூய்மை இல்லாமல் தான் உள்ளது. மார்க்கெட்டுகளை சுத்தம் செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் மார்க்கெட்டுகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். கலாசி பாளையம் மார்க்கெட்டை சுத்தம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

பெங்களுரு துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்மலா கூறுகையில், தூய்மையான நகரங்களின் பட்டியலில் பெங்களூருவுக்கு 43-வது இடம் கிடைத்திருக்கிறது. துப்புரவு தொழிலாளர்கள் தங்களது பணிகளை சரியாக செய்து வருகிறார்கள். அப்படி இருந்தும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தொல்லைகள் கொடுக்கப்படுகிறது, பல இன்னல்களை சந்திக்கிறார்கள். ஆனாலும் தூய்மை பணிகளில் தினமும் துரித ரீதியில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவை தூய்மைப்படுத்துவதில் துப்புரவு தொழிலாளர்களின் பங்கு மிகப்பெரியது. பெங்களூரு தூய்மையான நகரமாக மாறினாலும், அதற்கான பயன் துப்புரவு தொழிலாளர்களுக்கு கிடைக்க போவதில்லை. பெங்களூருவை தூய்மையான நகரமாக மாற்ற மாநகராட்சி சிறப்பான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.


Next Story