ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு...!
மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.
அண்டை மாநிலமான கர்நாடகத்தில் உடுப்பி அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்பறைக்குள் செல்ல தடை விதித்த விவகாரம் அங்கு விஸ்வரூபம் எடுத்தது.
போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினர். இதற்கு எதிராகவும் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.
இது அந்த மாநிலத்தில் விவாதப்பொருளானது.
இதற்கு மத்தியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வர கர்நாடக மாநில அரசு தடை விதித்து பிப்ரவரி மாதம் 5-ந் தேதி உத்தரவிட்டது. அந்த தடை உத்தரவில், இத்தகைய உடை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்குக்கு இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஐகோர்ட்டில் வழக்கும், தீர்ப்பும்
இதை எதிர்த்து, மாணவிகள், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குகளைத் தொடுத்தனர். அந்த வழக்குகளில், ஹிஜாப் அணிவது, இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமை என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மாணவிகளின் வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து, "மாநில அரசின் தடை உத்தரவு செல்லும்" என கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி தீர்ப்பு அளித்தது. மாணவிகளின் வழக்கை தள்ளுபடியும் செய்தது.
"ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தில் இன்றியமையாத மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை" என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து ஆயிஷாத் ஷிபா உள்ளிட்ட மாணவிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு விசாரித்தது. இந்த விசாரணை 10 நாட்கள் நடந்தது.
விசாரணையின்போது வழக்குதாரர்கள் சார்பில் வக்கீல்கள் தங்கள் வாதங்களில் கூறிய முக்கிய விஷயங்கள்:-
* முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வருவதைத் தடுப்பது, அவர்களின் படிப்பை ஆபத்தில் ஆழ்த்திவிடும், ஏனெனில் அவர்கள் வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்து விடலாம்.
* அடிப்படை உரிமைகள், என்ன அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மற்றும் மத சுதந்திரம் ஆகியவை வகுப்பறைக்குள் குறையாது.
* வகுப்பறைகளுக்குள் ஹிஜாப் அணிந்து கொண்டு செல்வது பொது ஒழுங்கு, சுகாதாரம் மற்றும் ஒழுக்கத்தை மீறுவதாக கூறும் கர்நாடக அரசு, அதற்கு ஆதரவாக ஒரு சிறிய ஆதாரத்தை கூட முன்வைக்கவில்லை.
* இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வாதங்கள் வழக்குதாரர்கள் தரப்பில் எடுத்து வைக்கப்பட்டன. இதற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் மறுத்து வாதிடப்பட்டது.
மாறுபட்ட தீர்ப்பு
இந்த வழக்குகளின் விசாரணை கடந்த மாதம் 22-ந் தேதி முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்தபோதும் இதன் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்குகளில் தீர்ப்பு நேற்று வந்தது.
ஆனால் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா ஆகிய இருவரும், ஒன்றுபட்ட தீர்ப்பினை வழங்காமல், 2 விதமான முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளதால், இந்த விவகாரத்தில் முடிவு வரவில்லை.
அமர்வுக்கு தலைமை வகித்த நீதிபதி ஹேமந்த் குப்தா, கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்தார். நீதிபதி சுதன்சு துலியா, மேல்முறையீடுகள் ஏற்கப்படுவதாக கூறி உள்ளார். மேலும், ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்பறைக்கு வருவது என்பது மாணவிகளின் விருப்ப தேர்வு என கூறி உள்ளார்.
நீதிபதி ஹேமந்த் கருத்துகள்
நீதிபதிககள் இருவரும் தங்கள் தீர்ப்புகளில் கூறிய முக்கிய கருத்துகள் தெரிய வந்துள்ளன. அவை வருமாறு:-
நீதிபதி ஹேமந்த்; இந்த வழக்கில் தனக்கு மாறுபட்ட கருத்துகள் உள்ளதாக கூறி உள்ளார். மேலும் அவர் 11 கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு பதில் அளித்துள்ளார். ஆனால், அவை அனைத்தும் மேல்முறையீடு செய்துள்ள மாணவிகளுக்கு எதிரானவை என கூறி உள்ளார்.
அவர் எழுப்பிய கேள்விகளில், அரசியல் சாசனத்தின் பிரிவு 25-ன்கீழ், மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்துக்கான உரிமை மற்றும் பிரிவு 25 -ன் கீழ் அத்தியாவசிய மத நடைமுறைகளுக்கான உரிமையின் வரம்பு மற்றும் நோக்கம் குறித்த கேள்வி அடங்கும். மேலும், பிரிவு 19 (1) (ஏ)-ன் கீழ், கருத்து சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் பிரிவு 21-ன் கீழ், தனிப்பட்ட உரிமைக்கான உரிமைகள் ஒன்றுக்கொன்று பிரத்யேகமானவையா அல்லது அவை ஒன்றுக்கொன்று பொருந்துகின்றனவா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
அத்துடன், ஹிஜாப் அணிவது இன்றியமையாத மதச் செயலாகக் கருதப்படுகிறதா என்பதுவும், அதை உரிமை கோரலாமா என்பதும் தனது தீர்ப்பில் உள்ள மற்றொரு கேள்வி என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கேள்விகளுக்கான பதில்கள், மேல்முறையீடு செய்தவர்களுக்கு எதிரானவை என்பதால் மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த விவகாரம் சட்டத்தின் கணிசமான கேள்வியை உள்ளடக்கியது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று மேல்முறையீடு செய்த சிலரின் வக்கீல்கள் முன்வைத்த வாதங்கள் ஏற்கத்தக்கவை அல்ல" எனவும் தெரிவித்துள்ளார்.
"சகோதரத்துவம் மற்றும் கண்ணியம் என்ற அரசியலமைப்பு வாக்குறுதியை கர்நாடக அரசு உத்தரவு பாதிப்பதாக நான் பார்க்க வில்லை. மாறாக, இது போன்ற சகோதரத்துவ விழுமியங்களை எந்த விதமான இடையூறும் இல்லாமல் உள்வாங்கி வளர்க்கக்கூடிய சமமான சூழலை இது ஊக்குவிக்கிறது என்றே நான் பார்க்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிபதி சுதன்சு துலியா
நீதிபதி சுதன்சு துலியா தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:-
* இந்த வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு தவறான பாதையை எடுத்துள்ளது. இது வெறுமனே, அரசியல் சாசன பிரிவு 19(1) (ஏ) மற்றும் அதன் பொருந்தக்கூடிய தன்மை மற்றும் பிரிவு 25 (1) ஆகியவற்றை பற்றிய கேள்வியாக இருந்தது. இறுதியில் ஹிஜாப் அணிந்து கொண்டு வருவது என்பது மாணவிகளின் விருப்பத்தேர்வுதான். அதற்கு அதிகமாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை.
* இதில் முடிவு எடுக்கிறபோது, பெண் குழந்தையின் படிப்புதான் என் மனதில் இருந்தது. ஏற்கனவே கிராமப்புறங்களிலும், பகுதியளவு நகர்ப்புறங்களாக உள்ள இடங்களிலும், பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததுதான். எனவே நாம் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துகிறோமோ என்பதுதான் என் மனதில் இருந்தது.
* பள்ளிக்கூட வாயில்களுக்குள் நுழையும் முன் மாணவிகளை ஹிஜாபை கழற்றச் சொல்வது முதலில் அவர்களின் தனியுரிமையை பறிப்பதாகும். பின்னர் அது அவர்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல் ஆகும். அடுத்து, பின்னர் அது அவர்களுக்கு மதச்சார்பற்ற கல்வியை மறுப்பது ஆகும்.
* நமது அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ், ஹிஜாப் அணிவது வெறுமனே விருப்பமான விஷயமாக இருக்க வேண்டும். அது அத்தியாவசியமான மத நடைமுறையாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது இன்னும் மனசாட்சி, நம்பிக்கை மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றின் விஷயமாகவே உள்ளது.
* இறையியல் கேள்விகளை தீர்ப்பதற்கான மன்றங்கள் கோர்ட்டுகள் அல்ல. பல்வேறு காரணங்களுக்காக கோர்ட்டுகள் அதைச் செய்ய போதுமானதாக இல்லை, ஆனால் மிக முக்கியமாக, ஒரு குறிப்பிட்ட மத விஷயத்தில் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணோட்டங்கள் இருக்கும், எனவே ஒன்றைக்காட்டிலும் மற்றொன்றை தேர்வு செய்ய கோர்ட்டுக்கு எதுவும் அதிகாரம் அளிக்காது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
தடை நீடிப்பு
இவ்வாறு 2 நீதிபதிகள், இரு வெவ்வேறு தீர்ப்பினை வழங்கி உள்ளதால், இந்த விவகாரம் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவர், இந்த வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு உத்தரவிடுவார்.
கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரையில், கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புதான் நடைமுறையில் இருக்கும். குறிப்பாக, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.