சீன விவகாரத்தில் பிரதமர் மோடியின் மவுனத்திற்கு இந்தியா விலை கொடுக்கிறது: காங்கிரஸ் விமர்சனம்


சீன விவகாரத்தில் பிரதமர் மோடியின் மவுனத்திற்கு இந்தியா விலை கொடுக்கிறது:  காங்கிரஸ் விமர்சனம்
x
தினத்தந்தி 4 April 2023 9:09 AM GMT (Updated: 4 April 2023 10:34 AM GMT)

எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையிலும் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் வகையில், சீனா அம்மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை "திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்" என்று பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெயரிடப்பட்ட 11 இடங்களில் ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், இரண்டு நிலப் பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும். சீனாவினால் உரிமை கோரப்படும் பகுதி எப்போதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். ஆனால், சீனா இந்த இடங்களுக்கு சீனப் பெயர்களைச் சூட்டுவதன் மூலம் அவற்றைத் தங்களுடையதாக உரிமை கொண்டாட நினைக்கிறது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்தது. வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இது குறித்து கூறுகையில், சீனா இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வது இது முதல் முறை அல்ல. புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை வழங்குவது களத்தில் உள்ள நிலைமையை மாற்றாது.அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இப்போதும் அது தொடரும்" என்று தெரிவித்து உள்ளது.

இதனிடையே, சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி அச்சப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சீனா 2 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட நமது இடத்தை பறித்துள்ளது. இடங்களின் பெயர்களை தற்போது மாற்றுகிறார்கள். பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். எந்த பதிலும் இல்லை! ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story