அசைவம் சாப்பிடுவோரின் ஓட்டு வேண்டாம் என பா.ஜனதாவால் கூற முடியுமா?; காங்கிரஸ் சவால்


அசைவம் சாப்பிடுவோரின் ஓட்டு வேண்டாம் என பா.ஜனதாவால் கூற முடியுமா?; காங்கிரஸ் சவால்
x

அசைவம் சாப்பிடுகிறவர்களின் ஓட்டு வேண்டாம் என கூற முடியுமா? என்று பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.

பெங்களூரு:

அசைவம் சாப்பிடுகிறவர்களின் ஓட்டு வேண்டாம் என கூற முடியுமா? என்று பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.

கர்நாடக காங்கிரஸ் துணைத்தலைவர் உக்ரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தோல்வி அடைந்துவிட்டது

சட்டத்துறை மந்திரி மாதுசாமி, கர்நாடகத்தில் ஆட்சி நடைபெறவில்லை, ஆட்சியை தள்ளி கொண்டிருக்கிறோம் என்று கூறினார். ஊழல் தாண்டவமாடுகிறது. 40 சதவீத கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அவர்கள் மீண்டும் ஒருமுறை கடிதம் எழுத திட்டமிட்டுள்ளனர். அனைத்து துறைகளிலும் அரசு தோல்வி அடைந்துவிட்டது. குடகிற்கு சென்ற சித்தராமையா மீது முட்டையை வீசி அவமானப்படுத்தினர். சித்தராமையா இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றதாக கூறி பா.ஜனதா குற்றம்சாட்டுகிறது. ஒருவர் தான் விரும்பும் உணவுகளை சாப்பிடலாம். இதற்கு அரசியல் சாசனத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. கர்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் இறைச்சி மற்றும் மதுபானத்தை வைத்து பூஜை செய்கிறார்கள். அதை பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்குகிறார்கள்.

ஓட்டு வேண்டாம்

கர்நாடகத்தில் 80 சதவீதம் பேர் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் சுயமரியாதையுடன், பக்தி உணர்வுடன் வாழ்கிறார்கள். அசைவம் சாப்பிடுகிறவா்களின் ஓட்டு வேண்டாம் என்று பா.ஜனதாவால் கூற முடியுமா?. சாதி-மதங்களை உடைத்து அதில் குளிர் காய்வதே பா.ஜனதாவின் வேலை. பா.ஜனதாவின் இந்த கொள்கையை மக்கள் புரிந்து கொள்வார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் அக்கட்சிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு உக்ரப்பா கூறினார்.


Next Story