இமாச்சல பிரதேசம்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு


இமாச்சல பிரதேசம்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு
x

image courtesy: ANI

இமாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர்.

காங்கரா,

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக அங்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை வெள்ள பாதிப்பும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக, காங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள ரெயில்வே பாலம் உடைந்து விழுந்தது.

இமாச்சல பிரதேசத்தில் கங்கரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மூர், மண்டி ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மண்டி, கங்கரா, சம்பா மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு, திடீர் வெள்ளம், மேக வெடிப்புகள் என்று 34 சம்பவங்கள் நடந்தன. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், எஸ்டிஆர்எப் பணியாளர்களும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழையால் 742 சாலைகள் மற்றும் 172 நீர் வழங்கல் திட்டங்கள் சீர்குலைந்தன என்றும் இவற்றில் 407 சாலைகள் இன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவை நாளைக்குள் சரிசெய்யப்படும் என்றும் தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.232.31 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக முதன்மை செயலாளர் சர்மா தெரிவித்தார். இமாச்சலப் பிரதேசத்தின் தாழ்வான மற்றும் நடு மலைப்பகுதிகளில் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என உள்ளூர் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story