மனைவியை கொன்று உடலை புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொன்று உடலை புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு புறநகர் கோர்ட்டு உத்தரவிட்டது.
தொட்டபள்ளாப்புரா:
மனைவியை கொன்று உடலை புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு புறநகர் கோர்ட்டு உத்தரவிட்டது.
கழுத்தை நெரித்து கொலை
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா தொட்டபெலவங்கலாவை சேர்ந்தவர் ராஜேஸ். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரது மனைவி லட்சுமி(வயது 38). இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதுபோல கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி ராஜேஸ், லட்சுமி இடையே குடும்ப தகராறு உண்டானது.
அப்போது ராஜேஸ், லட்சுமியை கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் லட்சுமியின் உடலை துண்டு, துண்டாக வெட்டிய ராஜேஸ் உடலை குழி தோண்டி புதைத்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தொட்டபெலவங்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் தண்டனை
கைதான ராஜேஸ் மீது பெங்களூரு புறநகர் கோர்ட்டில் தொட்டபெலவங்கலா போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி ரமேஷ் தீர்ப்பு கூறினார்.
அப்போது ராஜேஸ் மீதான கொலை குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகி உள்ளதால் ராஜேசுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜேசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.