மத்திய அரசை எதிர்த்து 2-வது நாளாக போராட்டம் - இரவு முழுவதும் தர்ணா பந்தலில் அமர்ந்திருந்த மம்தா பானர்ஜி


மத்திய அரசை எதிர்த்து 2-வது நாளாக போராட்டம் - இரவு முழுவதும் தர்ணா பந்தலில் அமர்ந்திருந்த மம்தா பானர்ஜி
x

மத்திய அரசை எதிர்த்து தர்ணா போராட்டம் நடத்திய மம்தா பானர்ஜி, இரவு முழுவதும் தர்ணா பந்தலில் அமர்ந்திருந்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துவதாக குற்றம்சாட்டி, 2 நாள் தர்ணா போராட்டத்தை அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்தார்.

100 நாள் வேலைத்திட்டம், வீட்டுவசதி மற்றும் சாலை திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டதாகவும், ரூ.1 லட்சம் கோடி பாக்கி வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நேற்று முன்தினம் கொல்கத்தாவில் சிவப்பு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு மம்தா பானர்ஜி 2 நாள் தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அங்கு பேசுகையில், பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதன்மூலம், பா.ஜனதா, காங்கிரசிடம் இருந்து சம தூரத்தை கடைபிடிப்பதாக கூறிய முந்தைய நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொண்டார்.

இரவிலும் போராட்டம்

நேற்று முன்தினம் இரவு முழுவதும் மம்தா பானர்ஜி தர்ணா பந்தலிலேயே அமர்ந்திருந்தார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர்கள் பிர்ஹத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தநிலையில், நேற்று 2-வது நாளாக தர்ணா போராட்டம் நீடித்தது. தர்ணா நடக்கும் இடத்திலும், அதைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தொண்டர்கள், பொதுமக்கள் என வேடிக்கை பார்க்க திரண்டவர்களால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பஞ்சாயத்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடந்த இப்போராட்டம், அரசியல் சூட்டை அதிகப்படுத்தி உள்ளது.


Next Story