பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் சேவை அடுத்த மாதம் தொடக்கம்; கவர்னர் உரையில் அறிவிப்பு


பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் சேவை அடுத்த மாதம் தொடக்கம்; கவர்னர் உரையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 10 Feb 2023 6:46 PM GMT)

பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று கவர்னர் உரையில் அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று கவர்னர் உரையில் அறிவித்துள்ளார்.

குப்பை கழிவுகள்

கர்நாடக சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:-

கர்நாடக தலைநகர் பெங்களூரு, உலக வரைபடத்தில் இடம் பிடித்துள்ளது. இங்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. சாலைகள், ராஜகால்வாய்கள், மேம்பாலங்கள், சுரங்க பாதைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் குப்பை கழிவுளை நிர்வகிக்க பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரெயில் சேவை

மைசூரு ரோடு முதல் கெங்கேரி வரையில் 7.53 கிலோ மீட்டர் தூரத்திற்கும், எலச்சினஹள்ளி முதல் சில்க் நிறுவனம் வரை 6.12 கிலோ மீட்டர் தூரம் வரை என மொத்தம் 13.65 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே போல் பையப்பனஹள்ளி முதல் ஒயிட்பீல்டு வரை 15.81 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த பாதையில் அடுத்த மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும். ஓ.ஆர்.ஆர். ரோடு-சர்வதேச விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெங்களூருவில் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாதம் 10 ஆயிரம் லிட்டர் நீர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1.03 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் அர்க்காவதி லே-அவுட், டாக்டர் சிவராம் காரந்த் லே-அவுட், நாடப்பிரபு கெம்பேகவுடா லே-அவுட் மற்றும் இதர வீட்டு வசதி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துமகூரு ரோடு முதல் பல்லாரி ரோடு வரையிலும், பழைய மெட்ராசில் இருந்து ஓசூர் ரோடு வரையிலும் 8 வழி வெளிவட்டச்சாலை அமைக்கப்படுகிறது.

போக்குவரத்து ஆணையம்

பெங்களூரு புறநகர் ரெயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும். பெங்களூரு நில போக்குவரத்து ஆணைய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் செயல்படும் அரசு அமைப்புகள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

இவ்வாறு கவர்னர் கூறினார்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மகிழ்ச்சி

பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ சேவை தொடங்கப்படும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒயிட்பீல்டு பகுதியில் நூற்றுக்கணக்கான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. பெங்களூருவில் அந்த பகுதி மென்பொருள் நிறுவனங்களின் குவிமையமாக திகழ்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தற்போது அவர்கள் தினமும் தங்களின் சொந்த வாகனத்தில் பணிக்கு செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அந்த பகுதிக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கெங்கேரி பகுதியில் இருப்பவர்களும், எலச்சினஹள்ளி பகுதியில் இருப்பவர்களும் மிக எளிதாக மெட்ரோ ரெயிலில் ஒயிட்பீல்டு பகுதிக்கு பணிக்கு சென்ற வர முடியும். அந்த பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டால் அந்த பகுதியில் வாகன நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story