காதலை கைவிட்டதால் பெண்ணை கொல்ல மிக்சி குண்டு அனுப்பிய வாலிபர் கைது


காதலை கைவிட்டதால் பெண்ணை கொல்ல மிக்சி குண்டு அனுப்பிய வாலிபர் கைது
x

கூரியர் அலுவலகத்தில் மிக்சி வெடித்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காதலை கைவிட்ட பெண்ணை கொல்ல பெங்களூரு வாலிபர் மிக்சி குண்டு அனுப்பியது தெரியவந்துள்ளது.

ஹாசன்:

கூரியர் அலுவலகத்தில் மிக்சி வெடித்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காதலை கைவிட்ட பெண்ணை கொல்ல பெங்களூரு வாலிபர் மிக்சி குண்டு அனுப்பியது தெரியவந்துள்ளது.

மிக்சி வெடித்த விபத்து

கர்நாடக மாநிலம் ஹாசன் (மாவட்டம்) படாவனே போலீஸ் எல்லைக்குட்பட்ட குவெம்பு நகர் பகுதியில் டி.டி.டி.சி. கூரியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் உரிமையாளர் சசிகுமார். இந்த கூரியர் அலுவலகத்திற்கு வந்த பார்சல் ஒன்றை உரிமையாளர் சசிகுமார், வாடிக்கையாளரின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். கடந்த 17-ந் தேதி இந்த கூரியர் வாடிக்கையாளர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கூரியர் பெண் ஒருவருக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த பெண் பிரித்து பார்த்த போது மிக்சி இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பெண் மீண்டும் சசிகுமாரிடம் வந்து கொடுத்துள்ளார். இதையடுத்து சசிகுமார் கடந்த 26-ந்தேதி இரவு அந்த பார்சலை எடுத்த போது அது தவறி விழுந்து வெடித்து சிதறியது.

போலீசார் விசாரணை

இதில் சசிகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்து சம்பவம் நடந்திருந்தது.

இதனால் மிக்சி வெடித்த சம்பவம் குண்டுவெடிப்பாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மைசூருவை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர். மேலும் வெடித்து சிதறிய மிக்சி பாகங்களை ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

டெட்டனேட்டர் குண்டு

இதுகுறித்த ஹாசன் படாவனே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த மிக்சியில் டெட்டனேட்டர் குண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆனால் இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இல்லை என்றும், இருவர் இடையிலான முன்விரோதத்தில் நடந்த சம்பவம் என்று ஹாசன் போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

திடுக்கிடும் தகவல்கள்

இ்தற்கிடையே பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியை தீர்த்து கட்டுவதற்காக பார்சலில் மிக்சி குண்டை அனுப்பி வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், காதலன் பெங்களூருவை சேர்ந்த அனூப் என்பதும், அவரது காதலி ஹாசனை சேர்ந்த பெண் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் பின்வருமாறு:-

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் ஆகியுள்ளது. ஆனால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில், 2-வது திருமணத்திற்காக பெண் தனது பெயர், முகவரி உள்ளிட்டவற்றை ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். அப்போது அனூப்பிற்கு, அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒருவரைெயாருவர் காதலித்து வந்துள்ளனர்.

இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியும் வந்துள்ளனர். இந்த நிலையில் அவ்வப்போது அனூப்பை பெங்களூரு சென்று சந்தித்த அந்த பெண் பணம், பொருட்களை வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளும்படி அனூப் அந்த பெண்ணை வலியுறுத்தியுள்ளார். அவர் மறுத்ததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் அந்த பெண் திரும்ப கொடுக்கவில்லை.

காதலை கைவிட்டதால் ஆத்திரம்

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். காதலி காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த அனூப் தனது காதலியை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதாவது மிக்சியில் டெட்டனேட்டர் பொருத்தியுள்ளார். அந்த மிக்சியை திறந்ததால் வெடிகுண்டு வெடிக்கும் வகையில் தயாரித்து அதனை பெண்ணின் வீட்டு முகவரிக்கு கூரியர் மூலம் பார்சல் அனுப்பி வைத்துள்ளார். அதில் அனூப் தனது முகவரியை குறிப்பிடவில்லை.

அதன்படி அந்த பார்சல் ஹாசன் குவெம்பு நகரில் கூரியர் அலுவலகம் நடத்தி வரும் சசிகுமாரிடம் வந்துள்ளது. அவர் அப்பெண்ணின் வீட்டுக்கு கொண்டு சென்று கொடுத்துள்ளார். அந்த பார்சலை திறந்த பெண், மிக்சி இருப்பதை பார்த்துள்ளார். மேலும் அந்த பார்சலில் அனுப்புனர் முகவரி இல்லாததாலும், மிக்சியை தனக்கு வேண்டாம் என கூறி அதனை அந்த பெண், கூரியர் அலுவலகத்திற்கு வந்து திரும்ப கொடுத்துள்ளார்.

கீழே விழுந்ததால் வெடித்தது

இதையடுத்து சசிகுமார் பார்சல் எங்கிருந்து வந்தது என்பதை பார்த்துள்ளார். அதில் பெங்களூரு பீனியாவில் உள்ள டி.டி.டி.சி. கூரியரில் இருந்து அனுப்பியது தெரியவந்தது. அப்போது அந்த பெண்ணிடம் சசிகுமார் திரும்ப அந்த பார்சலை அனுப்ப ரூ.300 தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதையடுத்து அந்த மிக்சி இருந்த பார்சலை கீழே வைக்க முயன்ற போது தவறி விழுந்துள்ளது.

அப்போது டெட்டனேட்டர் பொருத்தி இருந்ததால் மிக்சி வெடித்து சிதறியது. இதில் சசிகுமார் பலத்த காயம் அடைந்ததும், அவரது அலுவலக கண்ணாடி, சுவரில் விரிசல் விழுந்தும் தெரியவந்தது. மேற்கண்ட தகவல்கள் சசிகுமார் மற்றும் ஹாசன் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது

இதையடுத்து ஹாசன் படாவனே போலீசார் வாலிபர் கைது செய்தனர். ெபண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காதலை கைவிட்ட பெண்ணை கொல்ல மிக்சி குண்டை வாலிபர் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story