இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்


இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
x

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும், இயற்கையை பாதுகாப்பது நமது கலாசாரத்தின் ஒரு பகுதி எனவும் புலிகள் திட்ட பொன் விழாவில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பெங்களூரு:

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும், இயற்கையை பாதுகாப்பது நமது கலாசாரத்தின் ஒரு பகுதி எனவும் புலிகள் திட்ட பொன் விழாவில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

1973-ல் தொடங்கப்பட்ட புலிகள் திட்டம்

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் அழிந்து வரும் வனவிலங்கு பட்டியலில் உள்ளது. இதனால் புலிகளை காக்க 1973-ம் ஆண்டு ஏப்ரலில் மத்திய அரசு புலிகளை பாதுகாக்கும் வகையில் புலிகள் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு இந்த வனப்பகுதி பந்திப்பூர் புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் புலிகள் காப்பகம் தொடங்கி தற்போது 50 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் புலிகள் திட்ட பொன் விழா மைசூருவில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏப்ரல் 9-ந்தேதி (அதாவது நேற்று) நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

பிரதமர் மோடி சபாரி சென்றார்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, 2022-ம் ஆண்டின் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் கலந்்துகொள்ள பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்னையில் நடந்த வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு 9.45 மணி அளவில் மைசூருவுக்கு தனி விமானத்தில் வந்தார். மண்டஹள்ளி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கலெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், முதல்-மந்திரி, மந்திரிகள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில் அங்குள்ள ஒரு ஓட்டலில் பிரதமர் மோடி தங்கினார். புலிகள் திட்ட பொன் விழாவையொட்டி பிரதமர் மோடி நேற்று காலை பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் 2 மணி நேரம் சபாரி சென்று வனவிலங்குகளையும், அரிய பறவைகளையும் கண்டு ரசித்தார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் முதுமலை வனச்சரணாலயத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானை முகாமிற்கு சென்று யானைகளுக்கு உணவு வழங்கினார்.

புலிகள் திட்ட பொன்விழா

மேலும் ஆஸ்கார் விருது பெற்ற ஆவண படத்தில் இடம் பெற்று இருந்த யானை வளர்ப்பாளர்கள் பொம்மன்-பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அதன் பிறகு பகல் 1 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி மைசூருவுக்கு வந்தார்.

பின்னர் அவர் மைசூரு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடந்த புலிகள் திட்ட 50-வது ஆண்டு பொன் விழாவில் கலந்துகொண்டார். இதில் பிரதமர் மோடி சர்வதேச புலிகள் கூட்டணி என்ற அமைப்பை தொடங்கி வைத்தார். மேலும் அவர் கடந்த 2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புலிகள் திட்டத்தின் வெற்றி பெருமை அளிப்பதாக உள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகிற்கும் பெருமையான விஷயம். இந்தியா புலிகளை காக்கும் பணியை மட்டும் செய்யவில்லை, அவைகள் செழித்து வளர்வதற்கான சூழல் அமைப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இந்தியா பிற உயிரினங்கள் மூலம் கிடைக்கும் பொருளாதாரம் மற்றும் சூழலியலில் நம்பிக்கை கொண்டுள்ளது. சுற்றுச்சூழல்-பொருளாதாரம் இடையேயான மோதலை இந்தியா நம்புவது இல்லை.

சம முக்கியத்துவம்

உலகில் அதிக புலிகளை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 200 புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலிகளை காக்கும் திட்டத்தின் வெற்றி, புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மூலம் வன உயிரினங்களை பாதுகாக்க இந்தியா எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது இந்திய கலாசாரம், பண்பாடு மற்றும் புராணங்களில் புலிகள் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது. கடவுள்களில் அய்யப்பன் முதல் துர்க்காதேவி வரை நமது கடவுள்களுக்கு புலிகள் வாகனமாக இருந்துள்ளன. அவற்றின் மீது அமர்ந்து கடவுள்கள் பயணம் செய்துள்ளனர்.

நமது புராண-வேதங்கள், வரலாற்று சிற்பங்களில் புலிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. நமது சுற்றுச்சூழலில் புலிகள் முக்கிய இனமாக உள்ளது. நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இந்தியாவில் புலிகள் காப்பகங்கள் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டிருக்கின்றன என்பது அத்துடன் இணைந்து போகும் தற்செயல் நிகழ்வுதான். சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் இடையிலான மோதலை இந்தியா நம்பவில்லை, மாறாக அவை இரண்டின் சகவாழ்வுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கிறோம்.

ஆசிய சிங்கங்கள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை கலையில் புலிகளின் வரைகலை உருவங்கள் காணப்படுகின்றன. மத்திய இந்தியாவை சேர்ந்த பரியா சமூகம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த ஓர்லி சமூகத்தினர் புலியை தெய்வமாக வணங்குகிறார்கள், அதே சமயம் இந்தியாவில் உள்ள பல சமூகங்கள் புலியை நண்பனாகவும் சகோதரனாகவும் கருதுகின்றன.

உலகின் நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் அறியப்பட்ட உலகளாவிய பல்லுயிர் பெருக்கத்தில் இந்தியா 8 சதவீதம் பங்களிக்கிறது. இந்தியாவில் 30 ஆயிரம் யானைகள் உள்ளன. அதே போல் ஏறத்தாழ 3 ஆயிரம் பெரிய ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களை இந்தியா கொண்டுள்ளது. ஆசிய சிங்கங்களை கொண்ட உலகின் ஒரே நாடு இந்தியா.

நீர்வாழ் உயிரினங்கள்

அதன் எண்ணிக்கை கடந்த 2015-ல் சுமார் 525 ஆக இருந்து. அது 2020-ல் 675 ஆக உயர்ந்தது. சிறுத்தைகளின் எண்ணிக்கையை 60 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. கங்கை போன்ற நதிகளை சுத்தப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் ஆபத்தில் இருப்பதாக கருதப்பட்ட சில நீர்வாழ் உயிரினங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. இந்த சாதனைகளுக்கு மக்களின் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பு கலாசாரமே காரணம் ஆகும். இயற்கையை பாதுகாப்பது இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதி.

வனவிலங்குகள் செழிக்க சுற்றுச்சூழல் அமைப்புகள் செழித்து வளர்வது முக்கியம். கடந்த 10 ஆண்டுகளில் சமூக இருப்புகளின் எண்ணிக்கை 43-ல் இருந்து 100-க்கும் மேல் அதிகரித்துள்ளது. நாட்டில் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களின் எண்ணிக்கை 9ல் இருந்து 468 ஆக அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையே உணர்ச்சி மற்றும் பொருளாதார உறவுகளை உருவாக்க வேண்டியது அவசியம்.

பல்லுயிர் பாதுகாப்பு

இந்த பந்திப்பூர் புலிகள் திட்டத்தின் வெற்றி பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளின் செயல்பாடு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் புலிகள் காப்பகங்களில் மனித-விலங்கு மோதல்களைக் குறைப்பதற்கு வழிவகுத்துள்ளது. புலிகளின் இருப்பு எல்லா இடங்களிலும் உள்ள உள்ளூர் மக்களின் வாழ்க்கை மற்றும் சூழலியல் ஆகியவற்றில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்துவிட்டது. நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த சிறுத்தைகள் கண்டம் விட்டு கண்டம் வெற்றிகரமாக கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன சிறுத்தை இந்திய நிலத்தில் மீண்டும் பிறந்துள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கான சர்வதேச ஒத்துழைப்பு முக்கியம்.

ஆரோக்கியமான சுற்றுச்சூழல்

வனவிலங்கு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் பிரச்சினை அல்ல, அது உலகளாவிய ஒரு விஷயம். இந்த விஷயத்தில் சர்வதேச கூட்டணி அவசியம். புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா உள்ளிட்ட உலகின் 7 புலி இனங்களை பாதுகாப்பதில் சர்வதேச புலிகள் கூட்டணி கவனம் செலுத்தும். ஜாகுவார் மற்றும் சிறுத்தைகளின் இருப்பிடமாக இருக்கும் நாடுகள் இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும்.

இந்த சர்வதேச கூட்டணி உறுப்பு நாடுகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சக நாடுகளுக்கு விரைவாக உதவவும், ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடியும். நாம் ஒன்றிணைந்து இந்த உயிரினங்களை அழிவில் இருந்து காப்பாற்றுவோம். மேலும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவோம்.

சிறந்த எதிர்காலம்

நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பாகவும், நமது பல்லுயிர் பெருக்கம் தொடர்ந்து விரிவடையும் போது மட்டுமே மனித சமூகத்திற்கு சிறந்த எதிர்காலம் சாத்தியமாகும். இந்த பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இந்தியா பெரிய மற்றும் லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒவ்வொரு இலக்கையும் அடைய உதவும் பரஸ்பர ஒத்துழைப்பில் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம்.

பழங்குடி மக்கள் பல நூற்றாண்டுகளாக புலி உட்பட ஒவ்வொரு பல்லுயிரியலையும் செழுமைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். இயற்கையில் இருந்து கொடுக்கல்-வாங்கல் சமநிலை பழங்குடி சமூகத்தின் பாரம்பரியத்தை இங்கே ஏற்றுக்கொள்ளலாம். ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிெபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் இயற்கைக்கும் வன உயிரினத்துக்கும் இடையிலான அற்புதமான உறவை பற்றிய நமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. ஆசியாவில் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் உடல்பாகங்களை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்வதை தடுக்க வேண்டும். இந்த நோக்கத்தில் தான் சர்வதேச புலிகள் கூட்டணி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மோடி கூறினார்.

டெல்லி புறப்பட்டார்

இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ், இணை மந்திரி அஸ்வினி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை முடித்துக்கொண்டு அவர், தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.


Next Story