ராகுல்காந்தி நாளை மறுநாள் டெல்லி பயணம்: முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி பாதயாத்திரையை ஒருநாள் நிறுத்திவிட்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) டெல்லிக்கு செல்கிறார்.
திருவனந்தபுரம்,
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. தொடங்கினார். நேற்று 13-வது நாளாக கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பாதயாத்திரை சென்றார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்னும் 2 தினங்களில் தொடங்குகிறது.
இந்த நிலையில் சோனியாக காந்தி கட்சி தலைவர் பதவி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை நடத்தி வரும் கே.சி. வேணுகோபால் எம்.பி.யை டெல்லிக்கு அழைத்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் நேற்று அவசரமாக கொச்சியில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
இதனிடையே சிகிச்சைக்கு பின் நாடு திரும்பிய சோனியா காந்தியை பார்ப்பதற்காகவும், கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் ராகுல் காந்தி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபயணத்தை ஒருநாள் நிறுத்திவிட்டு டெல்லி செல்கிறார். அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு மீண்டும் கேரளாவுக்கு வருவார்.
மறுநாள் 24-ந் தேதி காலை 7 மணிக்கு வழக்கம்போல் ராகுல் காந்தி சாலக்குடியில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார். அதே நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரள மாநில காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட்டால், போட்டியில் இருந்து விலக போவதாக சசி தரூர் எம்.பி. கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.